டிரெண்டிங்

தாமரைக்கு வாக்கு கேட்ட துப்புரவு தொழிலாளி மீது தாக்குதல்: காவல்நிலையம் முற்றுகை

kaleelrahman

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியில் வீடுகளில் சென்று பாஜகவுக்கு வாக்கு சேகரித்த பேரூராட்சி துப்புரவு தொழிலாளியை மாற்றுக் கட்சியை சேர்ந்த நபர் தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). பேரூராட்சி துப்பரவு பணியாளராக உள்ள இவர், பாஜகவின் விசுவாசியாகவும் உள்ளார். இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி விடுமுறை என்பதால், இவர் இருக்கும் பகுதியை சுற்றியுள்ள வீடுகளில் பாஜக கட்சியை ஆதரித்து வாக்கு சேகரித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று மாலை துப்புரவு பணி முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்ததார். அப்போது அவரது வீட்டின் அருகே வசிக்கும் மாற்று கட்சியை சேர்ந்த வினு (40) என்பவர் அவரை வழிமறித்து "எனது வீட்டில் நீ எப்படி வாக்கு கேட்கலாம்" எனத் தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளார். இதில் ராஜேந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், தனது மகன் மற்றும் உறவினர்களுடன் புதுக்கடை காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றுள்ளார்.

அப்போது பணியில் இருந்த காவல் ஆய்வாளர் உடன் சென்றவர்களை வெளியே அனுப்பிவிட்டு ராஜேந்திரனை தகாத வார்த்தைகளால் பேசி அவர் மீது வழக்குப்பதிவு செய்ய முயன்றுள்ளார். இதை அறிந்த பாஜக பொறுப்பாளர்கள் புதுக்கடை காவல்நிலையம் முன்பு குவிந்து ராஜேந்திரனை வெளியே விடக்கூறி கேட்டுள்ளனர். அதற்கு காவல் ஆய்வாளர் ஒத்துழைக்காததால் நள்ளிரவு என்றும் பாராமல் காவல் நிலையம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து காவல் நிலையத்தில் இருந்த மற்ற காவலர்கள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி துப்பரவு தொழிலாளி ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் வினு மீது வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை வெளியே விட்டனர். இதையடுத்து போராட்டக்காரர்கள் முற்றுகையை கைவிட்டு காவல் ஆய்வாளருக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியபடி கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.