டிரெண்டிங்

''மோடியின் அரசை கலைக்க வாஜ்பாய் நினைத்தார்'' : யஷ்வந்த் சின்கா

webteam

பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது அவரது ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய அப்போதைய பிரதமர் வாஜ்பாய் நினைத்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்கா தெரிவித்துள்ளார்‌. அந்த முடிவை அத்வானிதா‌ன் தடுத்து நிறுத்தியதாகவும் சின்கா கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ‌ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தில் கோத்ரா கலவரம் நடைபெற்றதை நினைவுக்கூர்ந்தார். கோத்ரா கலவரத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு, அப்போதைய பிரதமராக இருந்த அடல் பிகாரி வாஜ்பாய், நரேந்திர மோடியிடம் தெரிவித்ததாகவும், முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மோடி மறுத்துவிட்டதாகவும் கூறினார்.

மேலும் மோடி தலைமையிலான குஜராத் அரசை டிஸ்மிஸ் செய்தால், அமைச்சரவையில் இருந்து தாம் விலக நேரிடும் என்று அப்போதைய மத்திய உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி, வாஜ்பாயிடம் கூறியதாகவும், இதன் காரணமாகவே மோடியின் தலைமையில் இருந்த அப்போதைய குஜராத் மாநில அரசு தப்பித்ததாகவும் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.