மயிலாடுதுறையில் இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய காவல் உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து ஐஜி ரூபேஷ் குமார் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை வில்லியநல்லூரை சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம் பெண்ணிற்கும் நாகை மாவட்டம் தலைஞாயிறுவைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ் என்பவருக்கும் 2018ஆம் ஆண்டு ஃபேஸ்புக் மூலம் அறிமுகம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் அது காதலாக மாறி தனிமையில் இருவரும் இருந்துள்ளனர். இதில் சுபஸ்ரீ கர்ப்பமானார். இந்த செய்தி இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. இதிலிருந்து தப்பித்துக்கொள்ள எண்ணிய விவேக் ரவிராஜ் , சுபஸ்ரீயிடம் ஒருவருடம் கழித்து திருமணம் செய்து கொள்வோம். அதனால் கருவை கலைத்து விடுமாறு வற்புறுத்தி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அங்கு மருத்துவர் மூலம் கருக்கலைப்பும் செய்துள்ளார்.
நாளடைவில் சுபஸ்ரீயிடம் பேசுவதை சப்-இன்ஸ்பெக்டர் தவிர்க்கவே சந்தேகம் அடைந்த சுபஸ்ரீ தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி கெஞ்சியுள்ளார். அப்போது இச்சம்பவத்தை வெளியில் கூறினால் உன்னையும் உன் குடும்பத்தாரையும் கொன்று புதைத்து விடுவேன் என்றும், உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது எனவும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் சுபஸ்ரீ தகுந்த ஆதாரங்களுடன் தன்னை காதலித்து கர்ப்பமாக்கி கைவிட்ட காவல் உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ் மீது நடவடிக்கை எடுத்து தனக்கு நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரி நாகை காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தபிறகு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இதையடுத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாகி ஏமாற்றிய விவேக் ரவிராஜ் மீதும் இவரது தாயார் மீதும் சில தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வாக இன்று நாகை மாவட்டம் வலிவலம் காவல் நிலையத்தில் தற்போது உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த விவேக் ரவிராஜை பணியிடை நீக்கம் செய்து ஐஜி ரூபேஷ்குமார் மீனா உத்தரவு பிறப்பித்துள்ளார்.