படித்து முடித்த இளைஞர்களின் அடுத்த கனவு ஏதாவது ஒரு நல்ல நிறுவனத்தில் கைநிறைய சம்பளத்துடன் வேலை பார்க்கவேண்டும் என்பதாகும். ஆனால் அசாம் மாநிலத்தை சேர்ந்த ஒரு இளைஞர் தனது உழைப்பை மட்டும் நம்பி மோமோ (Momo) விற்று 25 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா...
இந்தியாவில் தற்போது மோமோ எனப்படும் நேபாள நாட்டு உணவுப் பொருள் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. எனவே மோமோவை அடிப்படையாகக் கொண்ட உணவு விற்பனை நிலையங்களை எல்லா இடங்களிலும் பரவலாக காண முடிகிறது.
இதில், பிரசித்திப்பெற்று வரும் மோமோமியா நிறுவனமானது சிறிய அளவில் தொடங்கப்பட்டது. ஆனால் தற்பொழுது ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் நிறுவனமாக மாறியுள்ளது. இந்த நிறுவனத்தின் வெற்றிக்கு காரணமானவர் அதன் உரிமையாளரான டெபாசிஸ் மஜூம்ந்தர். இவரைப்பற்றிதான் இந்த கட்டுரையில் நாம் பார்க்கப்போகிறோம்.
யார் இந்த டெபாசிஸ் மஜூம்ந்தர்..
அசாம் மாநிலம் கௌஹாத்தியை சேர்ந்தவர் தான் டெபாசிஸ். இவர் ஒரு லோயர் மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதிலிருந்தே சுயதொழில் தொடங்கி முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். "உனக்கென ஒரு பிராண்டை உருவாக்கு, பணம் உன்னை தானாக தேடி வரும்" என ஒருமுறை இவருடைய தாத்தா கூறியிருக்கிறார். அதை தாரக மந்திரமாக கொண்டு இவர் தனது தொழிலில் முன்னேறி இருக்கிறார்.
எல்லா இளைஞர்களைப் போலவும், டெபாசிஸ் மஜூம்ந்தர் கல்லூரி படிப்பை முடித்தவுடன் மாதந்தோறும் 1800 ரூபாய் சம்பளத்தில் வங்கியில் வேலைக்கு சென்றார். மாதத்திற்கு 1 லட்சம் ரூபாய் சம்பளம் வரை பதவி உயர்வும் சம்பள உயர்வும் பெற்றார்.
ஆனால் அந்த வேலை அவருக்கு எந்த திருப்தியும் அளிக்கவில்லை. எனவே 2016 ஆம் ஆண்டில் வங்கி வேலையை விடுத்து விட்டு ஐஸ்கிரீம் தயாரிக்கும் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கினார். ஆனால் அந்த தொழில் அவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி தந்ததோடு மட்டுமில்லாமல் 8 லட்சம் ரூபாய் கடனில் விட்டுச் சென்றது.
வாழ்க்கை மிகவும் கடினமானதாக மாறிய அந்த சூழலில் தன்னுடைய தாயாருக்கு மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் இவர் தவித்தாராம். அப்போது கௌகாத்தியில் ஒரு உணவகத்தில் மோமோ குறைந்த தரத்தில் விற்பனை செய்வதை கவனித்துள்ளார். அப்போதுதான் இவருக்கு மோமோக்களின் சந்தை குறித்து தெரிய வந்தது.
2018 ஆம் ஆண்டில் 3.5 லட்சம் ரூபாய் கடன் வாங்கி கௌஹாத்தியில் மோமோமியா கடையை தொடங்கினார். தொடக்கத்தில் பல்வேறு சவால்களை சந்தித்தாலும் 2020 ஆம் ஆண்டு வெற்றிகரமாக தனது இரண்டாவது கடையை இவர் தொடங்கியுள்ளார். இரு கடைகளிலும் அயராத உழைப்பு, தரமான சேவைகளில் புகழடைந்து, தற்போது இந்தியாவில் 200க்கும் அதிகமான மோமோமியா கடைகளை திறம்பட நடத்திவருகிறார். ஃபிரெஞ்சைஸ் முறையில் பலரும் ஆர்வத்துடன் வந்து இந்த தொழிலை செய்ய முன் வருகிறார்கள் என டெபாசிஸ் கூறுகிறார்.
இந்த நிறுவனத்தின் கிளைகளை தொடங்குவது எப்படி?
இவர் 2.5 லட்சம் ரூபாய் வழங்கினால் இந்த கடைக்கான அனைத்து செட் அப்களையும் செய்து தந்து விடுவாராம். மொத்த விற்பனையில் 5% இவருக்கு பங்கு தர வேண்டும் என்கிறார். இதனடிப்படையில், தற்பொழுது செயல்பட்டு வரும் 200 கடைகளில் ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறார். இவருக்கு கீழ் 400 பேர் வேலை செய்கின்றனர்.
ஒரு தொழில் தொடங்கவேண்டுமென்றால் பல சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அத்தகைய சவால்களை மன உறுதியுடன் விடாமுயற்சியுடன் எதிர்கொண்டு, குறுகியகாலத்தில், வெற்றியுடன் தனது நிறுவனத்தை நடத்தி வரும், டெபாசிஸ் மஜூம்ந்தர்க்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது