டிரெண்டிங்

அருணாச்சல வேட்பாளர்கள் சொத்து மதிப்பில் முதல்வருக்கு முதலிடம்

webteam

அருணாச்சல பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களிலேயே முதலமைச்சர் பெமா காண்டுதான் பெரும் செல்வந்தர் என்பது தெரியவந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து அருணாச்சல பிரதேசத்தில் சட்டப் பேரவை தேர்தலும் வரும் 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சி வேட்பாளர்களும் தங்களின் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். மொத்தமாக 184 வேட்பாளர்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். அதன் மூலம் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு தெரியவந்துள்ளது. 

அதன்படி அருணாச்சல பிரதேச மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சர் பேமா காண்டு 163 கோடி ரூபாய் சொத்துகளுடன் பணக்கார வேட்பாளராக களமிறங்கவுள்ளார். மேலும் 131 வேட்பாளர்கள் கோடிஸ்வரர்களாக இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் 148 பேர் போட்டியிட்டனர் அதில் 88 பேர் கோடிஸ்வரர்களாக இருந்தனர். ஆனால் இம்முறை அந்த அளவு சற்றே அதிகரித்துள்ளது. 

இந்த 131 வேட்பாளர்களில் 67 பேரின் சொத்து மதிப்பு 5 கோடிக்கும் மேல் உள்ளது. அதேபோல 44 வேட்பாளர்களில் சொத்து மதிப்பு 2-5 கோடிவரை உள்ளது. அதேசமயம் கட்சிகளின் அடிப்படையில் பார்த்தால் பாஜக 54 வேட்பாளர்களும், காங்கிரஸ் கட்சியில் 30 வேட்பாளர்களும், தேசிய மக்கள் கட்சியில் 11 வேட்பாளர்களும் கோடிஸ்வரர்களாக உள்ளனர்.