டிரெண்டிங்

80 வயதில் வேலைக்கு விண்ணப்பிக்கிறார் யஷ்வந்த் சிங்ஹா: அருண் ஜேட்லி பதிலடி

80 வயதில் வேலைக்கு விண்ணப்பிக்கிறார் யஷ்வந்த் சிங்ஹா: அருண் ஜேட்லி பதிலடி

webteam

வாஜ்பாய் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சிங்ஹா, தற்போது மத்திய நிதியமைச்சர் இருக்கும் அருண் ஜேட்லி மீது குறைக் கூறியிருந்தார். அதற்கு மத்திய நிதியமைச்சர் பதிலளித்துள்ளார்.

உயர் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி விவகாரங்களில் ஈடுபட்டு நாட்டின் பொருளாதாரத்தை பின்னுக்கு தள்ளிவிட்டார் அருண் ஜேட்லி என்று தனது கட்டுரை ஒன்றில் குற்றம்சாட்டி இருந்தார் யஷ்வந்த் சிங்ஹா. நான் இப்போது பேச வேண்டும் என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில் மோடியையும் அருண் ஜேட்லியையும் கடுமையாக தாக்கி இருந்தார். ஓவர் டைம் பார்க்கிறார் அருண் ஜேட்லி என்று கிண்டலடித்திருந்தார். இந்தக் கட்டுரை பெரும் புயலை கிளப்பியது. யஷ்வந்த் சிங்ஹாவின் குற்றச்சாட்டு தவறு என்றால், நிரூபித்து காட்டுங்கள் என்று பாஜக அரசுக்கு சிவசேனா கட்சி சவால் விடுத்தது.

இந்நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுக்கு அருண் ஜேட்லி பதிலளித்துள்ளார். யஷ்வந்த் சிங்ஹாவுக்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சராக இருப்பது செளகரியமாக இல்லை போலும். இப்படி குற்றச்சாட்டு சொல்வதன் மூலம், அவர் 80 வயதில் வேலை கேட்டு விண்ணப்பிக்கிறார். அவர் நிதி அமைச்சராக இருந்தபோது 15 சதவீத வாராக்கடன் இருந்தது உள்ளிட்ட ‘சாதனைகளை’ மறந்துவிட்டார். கொள்கைகளை விட்டுவிட்டு மனிதர்களை விமர்சிக்க தொடங்கிவிட்டார். யஷ்வந்த் சிங்ஹா, ப.சிதம்பரத்துடன் கைகோர்த்து செயல்படுகிறார் என்று அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

இதற்கு நான் வேலை கேட்டு விண்ணப்பித்திருந்தால், அருண் ஜேட்லி அங்கு முதல் இடத்தில் அமர்ந்து இருக்க முடியாது என்று யஷ்வந்த் சிங்ஹா பதிலடி தந்துள்ளார்.