ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா அளித்த வாக்குமூலம் என வெளியான தகவல்களில் பெரும்பாலானவை தவறானவை என்று விசாரணை ஆணையம் கூறியுள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றச்சாட்டினர். இதனையடுத்து ஓய்வுப் பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டார். இந்த விசாரணை ஆணையத்தில் ஆஜராகி பலரும் வாக்குமூலம் அளித்து வருகின்றனர். சிறையில் இருந்த சசிகலா இந்த விசாரணை ஆணையத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவில்லை. அதற்கு பதிலாக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்திருந்தார்.
சசிகலா பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் குறித்து இன்று காலை செய்திகள் வெளியானது. அதில் ஜெயலலிதா குறித்த பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அப்போலோவில் இருந்த போது யார் யார் எல்லாம் சந்தித்தார்கள் என்பது குறித்தும் அதில் கூறப்பட்டுள்ளது. அதில், “அப்போலோ மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை அக்டோபர் 22ஆம் தேதி அப்போதைய தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் சந்தித்தார். அதிமுக தலைவர்கள் ஓபன்னீர்செல்வம், தம்பிதுரை மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் செப்டம்பர் 22 -27ஆம் தேதிகளில் சந்தித்தனர். செப்டம்பர் 27ஆம் தேதி தனது தனி பாதுகாப்பு அதிகாரிகளான பெருமாள்சாமி மற்றும் வீரபெருமாளை சந்தித்தார்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், சசிகலா வாக்குமூலம் தொடர்பாக வெளியான தகவல்களில் பெரும்பாலானவை தவறானவை என்று விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா ஓபிஎஸ், விஜயபாஸ்கர், நிலோபர் கஃபில் உள்ளிட்டோரை பார்த்ததாக கூறுவது தவறு என்று விசாரணை ஆணையம் கூறியுள்ளது. அதேபோல், ஜெயலலிதாவுக்கு 20 மருத்துவர்கள் சிகிச்சை அளித்ததாக வெளியான தகவல் பொய்யானவை என்று தெரிவித்துள்ளது.