அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை பார்க்க அக்டோபர் 1 ஆம் தேதிக்குப் பிறகு சசிகலாவைக் கூட அனுமதிக்கவில்லை என்று டிடிவி தினகரன் கூறினார்.
ஜெயலலிதாவை மருத்துவமனையில் யாரும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்றும், அவர் இட்லி சாப்பிட்டதாகக் கூறியது பொய் என்றும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது எடுத்த வீடியோவை வெளியிடட்டும் என்றும் அவர் கூறினார். அவரது குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் பேசிய டிடிவி தினகரன் விசாரணை வரும்போது ஆதாரங்கள் அளிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதே திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளர் பதவி கொடுத்ததும், பொதுச்செயலாளர் சசிகலாவின் காலில் விழுந்து வணங்கினார். சசிகலாதான் முதல்வர் ஆக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். சசிகலாவை முதல்வராக பொறுப்பேற்க கூறி கதறி அழுது கேட்டவர் சீனிவாசன். அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கிறோம், இன்றைக்கே ஆளுநரைச் சந்தித்து முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்று சசிகலாவிடம் கூறினார். சீனிவாசன் இன்று இப்படி பேசியது குறித்து எனக்கு வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி வந்தது. அதில் திண்டுக்கல் சீனிவாசன் அன்று பேசியது, அது நல்ல வாய், இன்று பேசுவது இது வேற வாய் என்று அனுப்பி இருந்தார்கள். இதை நாங்கள் செய்யவில்லை. அன்றும் இன்றும் டிவி நிகழ்ச்சி போல உருவாக்கி அனுப்புகிறார்கள். திண்டுக்கல் சீனிவாசன் பதவி ஆசையின் காரணமாகவே இவ்வாறு பேசி வருகிறார்.
ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, ஆளுநர் பார்த்துவிட்டு வந்து அறிக்கை வெளியிட்டார். ஆளுநர் பொய் சொன்னாரா என்று அவரிடம் தான் கேட்க வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் வந்து பார்த்தார்கள். லண்டன் மருத்துவர் வந்து சிகிச்சை அளித்துச் சென்றார். அப்போலோ மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் ஜெயலலிதா அறைக்கு சென்று வந்தார்கள். ஜெயலலிதா செப்டம்பர் 22 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உண்மையைச் சொல்ல வேண்டுமானால், அக்டோபர் 1ஆம் தேதிக்குப் பிறகு சசிகலாவை கூட ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதி அளிக்கவில்லை என்று கூறினார்.