மறைந்த தமிழக முதல்வர் அறிஞர் அண்ணாவின் 112 வது பிறந்தநாள் இன்று தமிழக மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அண்ணா கொள்கைகளுடன் முரண்பட்டிருக்கும் பா.ஜ.கவுடன் கட்சியின் பெயரிலேயே அண்ணா பெயரை வைத்துக்கொண்டு கூட்டணி வைத்திருக்கும் அ.தி.மு.கவின் செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வனிடம் ’அண்ணாவின் கொள்கைகளிலிருந்து அதிமுக விலகுகிறதா?’ என்றும் கேட்டோம்,
“பெயரிலே அண்ணா, கொள்கையிலே அண்ணா, கொடியிலே அண்ணா என்று நாங்கள் அண்ணாவை உயர்த்திப்பிடித்து வருகிறோம். அண்ணா மறைவுக்குப் பிறகு திமுக அவரை கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவிட்டது. கருணாநிதி அவருடைய குடும்ப அரசியலுக்கு முக்கியத்துவம் அளித்தாரே தவிர அண்ணாவை மறுதலித்துவிட்டார். அண்ணா பதவியேற்பு விழாவை அவருடைய மனைவியும் பார்க்க ஆசைப்பட்டார். அதனை தம்பிமார்கள் சொல்லியபோது, ’குடும்பத்திற்கும் அரசியலுக்கும் இடைவெளித் தேவை. அண்ணி வீட்டிலேயே இருக்கட்டும்’ என்று வீட்டிலேயே விட்டுவிட்டு பதவியேற்பு விழாவிற்கு சென்றவர் அண்ணா. அப்படிப்பட்ட ஈடு இணையற்ற தலைவர் அண்ணா உருவாக்கிய திமுக தற்போது குடும்ப அரசியலை செய்து வருகிறது. அரசியலையே அசிங்கப்படுத்துகிறது.
வைகைச் செல்வன்
திமுக அண்ணாவை மறந்தாலும் நாங்கள் மறக்கவில்லை. நாங்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதும் தேர்தலுக்கான கூட்டணியே தவிர கொள்கைகளில் சமரசமல்ல. திமுகவும்தான் பாஜகவோடு கூட்டணி வைத்தது. நாங்களும் இந்தித்திணிப்பை எதிர்த்துகொண்டுதான் வருகிறோம். சட்டமன்றத்திலும் இருமொழிக் கொள்கை தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கும் அனுப்பிவிட்டோம். அதேபோல, நீட் தேர்வு இந்தியா முழுமைக்குமான ஒன்று. மற்ற மாநிலங்கள் எடுத்த நிலைப்பாட்டைத்தான் தமிழக அரசும் நீட் விஷயத்தில் எடுத்திருக்கிறது” என்கிறார், அவர்