மாணவி அனிதாவின் கனவை நீட் தேர்வு கலைத்து விட்டது என்றும், இதற்கு அனைத்துக் கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய சீமான், மாணவி அனிதாவின் மருத்துவ படிப்புக் கனவை கலைத்தது நீட் தேர்வு தான் என்றும், மருத்துவ படிப்பில் சேர முடியவில்லை என்ற வலியே அவரை தற்கொலைக்கு தள்ளிவிட்டதாகவும் வருத்தம் தெரிவித்தார். அத்துடன் அனிதாவை சமூக நீதிக்கான போராளியாக பார்க்க வேண்டும் என்றும், அவரது தற்கொலைக்கு அனைத்து கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.