டிரெண்டிங்

“கைப்பற்றப்பட்ட பணம் அதிமுகவினருடையது” : ஆண்டிபட்டி வேட்பாளர் ஜெயக்குமார் விளக்கம்

“கைப்பற்றப்பட்ட பணம் அதிமுகவினருடையது” : ஆண்டிபட்டி வேட்பாளர் ஜெயக்குமார் விளக்கம்

webteam

ஆண்டிபட்டியில் கட்டுக்கட்டாக  பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக ஆண்டிபட்டி அமமுக வேட்பாளர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுகவின் சார்பில் ஜெயக்குமார், திமுக சார்பில் மகாராஜன் மற்றும் அதிமுக சார்பில் லோகிராஜன் போட்டியிடுகின்றனர். இதேபோன்று தேனி மக்களவைத் தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வன் (அமமுக), ஈவிகேஸ் இளங்கோவன் (காங்கிரஸ்), ரவீந்திரநாத் (அதிமுக) ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த சூழலில் ஆண்டிபட்டியில் உள்ள அமமுக அலுவலகத்தில் பணப்பட்டுவாடா நடத்தப்படுவதாக புகார் வந்தது. அதன் அடிப்படையில் பணப்பட்டுவாடா நடக்கிறதா என சோதனை செய்ய காவல்துறையினர் அங்கு சென்றபோது அமமுகவினருடன் மோதல் ஏற்பட்டுள்ளது. 

இதனைதொடர்ந்து காவல்துறையினர் வானத்தை நோக்கி 4 முறை துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் துப்பாக்கிச்சூட்டை தொடர்ந்து நடைபெற்ற வருமான வரி சோதனையில், அமமுக ஆதரவாளரின் கடையில் இருந்து கட்டுக்கட்டாக ஒன்றரை கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அதிக அளவில் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அமமுகவினரிடம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் பணம் உண்மையில் அதிமுகவினருடையது என்று ஆண்டிபட்டி அமமுக  வேட்பாளர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். ஆண்டிபட்டி அமமுக  வேட்பாளர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில், “நாங்கள் தான் அதிமுகவினர் பணம் விநியோகம் செய்வதாக கூறி பறக்கும் படையினருக்கு தகவல் கொடுத்தோம். ஆனால், போலீசார் அதிமுகவினரை காப்பாற்ற எங்கள் பணம் என கூறுகின்றனர்.அமமுகவினரிடம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் பணம் உண்மையில் அதிமுகவினருடையது” என்று ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். மேலும் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்றும் டம்பி புல்லட்டை போட்டு பில்டிங் உள்ளேயே சுட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.