ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது.
ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தப்பட்டு வருகிறது. தற்போதையை நாடாளுமன்ற தொடரிலும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் கட்சி பேதமின்றி இந்தக் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆந்திர முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவும் மத்திய அரசுக்கு எதிராக வலுவான எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். மத்திய அரசில் அங்கம் வகித்த தங்களது கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களையும் ராஜினாமா செய்ய வைத்தார். இருப்பினும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வமாக விலகவில்லை.
ஒருபுறம், தெலுங்கு தேசம் கட்சி அதிரடியான முயற்சிகளை மேற்கொள்ள, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் தன் பங்கிற்கு ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறது.
இதுகுறித்து ஒய்எஸ்ஆர் எம்.பி விஜய் சாய் கூறுகையில், “மக்களவை எம்.பி. சுப்பா நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருகிறார். மற்ற கட்சிகளும் எங்களுக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று எங்களது தலைமை எதிர்பார்க்கிறது. பட்ஜெட் தொடர்பான தீர்மானம் மக்களவையில் விவாதமின்றி நிறைவேறியது. அதேபோல் மாநிலங்களவையிலும் நிறைவேறிவிடும் என்பதால் நாளையே தீர்மானம் கொண்டு வருகிறோம்” என்றார்.
ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு மக்களவையில் பெரும்பான்மை இருப்பதால் ஆட்சி கவிழ வாய்ப்பு இல்லை. இருப்பினும், ஆந்திர மக்களின் நலனுக்காக செயல்படும் கட்சி என்ற பெயரை பெற, தேர்தல் அரசியலின் ஒரு அங்கமாக இதனை அக்கட்சி மேற்கொள்கிறது என்று பார்க்கப்படுகிறது. தங்களது தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு எல்லா கட்சிகளுக்கும் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார்.
ஒய்எஸ்ஆர் கட்சியில் அதிரடியான முயற்சியை தொடர்ந்து, பாஜக கூட்டணியில் இருந்தும் வெளியேறி தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே தனது ஆதரவை தெரிவித்துள்ளது. திரிணாமூல், இடதுசாரி உள்ளிட்ட கட்சிகளின் நிலைப்பாட்டை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.