டிரெண்டிங்

“தெலுங்கு மக்களை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டார் சந்திரபாபு” - பவன் கல்யாண் சாடல்

“தெலுங்கு மக்களை டெல்லியில் அடமானம் வைத்துவிட்டார் சந்திரபாபு” - பவன் கல்யாண் சாடல்

rajakannan

தெலுங்கு மக்களை சந்திரபாபு நாயுடு டெல்லியில் அடமானம் வைத்துவிட்டதாக நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண் விமர்சித்துள்ளார். 

ஆந்திர மாநிலத்தில் நட்சத்திர நடிகரான பவன் கல்யாண் 2014 ஆம் ஆண்டு ஜனசேனா என்ற கட்சியை தொடங்கினார். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு தொடர்ச்சியாக தன்னை ஒரு அரசியல்வாதியாக உருவாக்கிக் கொண்டு வருகிறார். 

கடந்த ஓராண்டாக சூறாவளி சுற்றுப் பயணங்கள் மேற்கொண்டு பல்வேறு பொதுக் கூட்டங்களை நடத்தி வருகின்றார். கடந்த மாதம் பவன் கல்யாண் நடத்திய பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொண்டனர். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என்றும் அவர் ஏற்கனவே அறிவித்து உள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியுடன் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அறிவித்துள்ளதை பவன் கல்யாண் கடுமையாக விமர்சித்துள்ளார். தெலுங்கு தேசம் கட்சி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தாலும் அதில் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று கூறியுள்ளார். 

இதுகுறித்து பவன் கல்யாண் பேசுகையில், “முதலமைச்சர் ஆக வேண்டும் என்பது மட்டுமே சந்திரபாபு நாயுடுவின் விருப்பம். ஆனால், நான் மாற்றம் வரவேண்டும் என்று விரும்புகிறேன். இளைஞர்கள் வேலைவாய்ப்பு கிடைக்காமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்தப் பிரச்னைகளை தீர்க்கமுடியாமல் அரசு திணறுகிறது.

2014 ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சிக்காக நாங்கள் பணியாற்றினோம். முதலமைச்சர் ஆன பிறகு உங்களுக்கு என்ன வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு என்னிடம் கேட்டார். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும், சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும், நல்ல ஆட்சி நடைபெற வேண்டும் என்று மட்டும்தான் அவரிடம் சொன்னேன். ஆனால், தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது. மணல் மாஃபியாக்களின் ஆதிக்கம் தான் தலை தூக்கியுள்ளது. மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு கடுமையாக சீர்குலைந்துள்ளது” என்று கூறினார். 

இதனிடையே, பவன் கல்யாண் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக தெலுங்கு தேசம் கட்சி விமர்சித்து வருகின்றது. இந்த விமர்சனம் குறித்து பேசிய பவன் கல்யாண்,“பாஜக பற்றியும், பிரதமர் மோடி குறித்தும் நான் ஏன் கவலைப்பட வேண்டும். மாநில பிரிவினையை ஆதரித்த கட்சி பாஜக. தங்கள் கட்சியுடன் ஜனசேனாவை இணைத்துவிடும் படி பாஜக தலைவர் அமித்ஷா என்னிடம் கேட்டுக் கொண்டார். மற்றொரு கட்சியுடன் இணைத்துக் கொள்வதைவிட உயிரிழப்பதே மேல் என்று அவரிடம் சொன்னேன்” என்றார்.