டிரெண்டிங்

“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி

“வன்னியர்களுக்கான இடஒதுக்கீடுதான் பாமக குறைவான தொகுதிகளை பெறக்காரணம்” - அன்புமணி பேட்டி

rajakannan

வன்னியர்களுக்கு 10.5 சதவிதம் உள் ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசு ஏற்றுக்கொண்டதுதான் அதிமுக கூட்டணி பாமக குறைவான தொகுதிகளை பெறக் காரணம் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

சட்டப்பேரவை தேர்தலுக்காக அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இதற்கான ஒப்பந்தம் இருதரப்பிலும் கையெழுத்தானது. ஒப்பந்தத்தில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் - ஈபிஎஸ், பாமக சார்பில் ஜி.கே.மணி, அன்புமணி கையெழுத்திட்டனர். பின்னர் அதிமுக, பாமக கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய ஓபிஎஸ், “அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகள் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாமக போட்டியிடும் 23 தொகுதிகளின் விவரம் பேச்சுவார்த்தைக்கு பின் அறிவிக்கப்படும்” என்றார்.

பின்னர் பேசிய அன்புமணி ராமதாஸ், “நடைபெறுகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாமக இடையே தேர்தல் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தின் படி பாமகவுக்கு 23 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தலில் பாமக அதிமுக கூட்டணி சேர்ந்து போட்டியிடும். நிச்சயமாக எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும். இந்த தேர்தலைப் பொறுத்தவரை எங்களுடைய நோக்கம் எங்களுடைய கோரிக்கை வன்னியர்களுக்கு தனியாக இடஒதுக்கீடு வேண்டுமென வைத்தோம். அதனை அதிமுக நிறைவேற்றி இருக்கிறது.

அதனால், இந்தத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுகின்ற சட்டமன்ற தொகுதிகளை குறைத்து பெற்றிருக்கிறோம். அதற்கு காரணம் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதுதான். இதனால் எங்கள் பலம் குறையப் போவது கிடையாது. எங்கள் கூட்டணி வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவார். 40 ஆண்டுகள் போராடி, பல போராட்டங்கள் நடத்தி இன்று மருத்துவர் ராமதாஸின் கோரிக்கை முதல் கட்டமாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது” என்றார்.