டிரெண்டிங்

தூத்துக்குடி: இரும்புகாலத்தில் பயன்படுத்திய இரும்பு உருக்கு ஆலை கண்டுபிடிப்பு!

JustinDurai

தூத்துக்குடி அருகே சிவகளையில் இரும்புகாலத்தில் பயன்படுத்தப்பட்ட இரும்பு உருக்கு ஆலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள சிவகளையில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உள்ள பரம்பு பகுதியில் முதுமக்கள் தாழிகள், எடை குண்டுகள், பாறை கிண்ணம், பானை ஓவியம், நடுக்கல், கல்தூண், புடைப்பு சிற்பம், வட்டக்கல், இரும்பிலான ஆயுதங்கள் உட்பட தொல்லியல் களம் கண்டறியப்பட்டதையடுத்து, கடந்த மே 25ம் தேதி தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தன் தலைமையில் அகழாய்வு பணிகள் தொடங்கின.

கடந்த சில நாட்களாக நடந்து வரும் இந்த அகழாய்வு பணியில் 20க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த முதுமக்கள் தாழிகள் விரைவில் வெளியே எடுக்கப்பட்டு அதற்குள் இருக்கும் பொருட்கள் அறிவியல் ஆய்வுக்கு அனுப்பப்படும் என தெரிகிறது.

இதேபோல் சிவகளையின் வடக்கே மிக நீளமான உச்சபரம்பு பகுதியானது சிவகளை கீழகுளத்திலிருந்து ஆரம்பித்து மேற்கே வல்லநாடு மற்றும் ஆதிச்சநல்லூர் வரை பல்லாயிரக்கணக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தொடர்ச்சியாக அமைந்துள்ளது.

சிவகளையை சுற்றி பெரிய அளவில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் புதைமேடுகள் காணப்படுவதால் பழங்காலத்தில் மனிதர்கள் வாழ்ந்த வாழ்விடப் பகுதியான தரிசுகுளம், செக்கடி மரங்களமேடு, சாஸ்தாகோயில் திரடு, வெள்ளத்திரடு, வலப்பான்பிள்ளை திரடு, ஆவரங்காடு மற்றும் பொட்டல் பகுதிகளில் உள்ள திரடுகளிலும் பழங்குடியேற்றங்கள் இருந்ததற்கான தடயங்களை, ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமரகுருபரர் சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் வரலாற்று ஆசிரியரான மாணிக்கம் கண்டறிந்து அதனை தொல்லியல் துறையினருக்கு தெரிவித்திருந்தார்.

இதையடுத்து சிவகளை பரம்பு பகுதியில் இருந்து தென்புறம் உள்ள வலப்பான்பிள்ளை திரட்டு பகுதியில் முன்னோர்கள் வாழ்ந்த பகுதியை கண்டறிய கடந்த ஜூன் 28ம் தேதி அகழாய்வு தொடங்கப்பட்டது. இந்த அகழாய்வு பணியில் முதற்கட்டமாக மூன்று குழிகள் அமைக்கப்பட்டன. இக்குழிகளிலிருந்து உடைந்த மண்பாண்ட பொருட்களின் பாகங்கள் சிறு, சிறு துண்டுகளாக கிடைத்து வருகிறது. இதனை தொல்லியல்துறை அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில், வரலாற்று ஆசிரியர் மாணிக்கம், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிவகளையில் ஆய்வு செய்ததில் 3,000ஆண்டுகள் பழமையான இரும்புகால பொருட்களான கத்தி, ஈட்டி, வேல், எடை கற்கள் என பல பொருட்களை அவர் மேற்கொண்ட கள ஆய்வில் கண்டுபிடித்தார்.

அப்போது கண்டெடுக்கப்பட்ட இரும்புகால பொருட்களை ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் மேல்நிலைப்பள்ளியில் காட்சிப்படுத்தியுள்ளார். அதே இடத்தில் அவர் நேற்று மேற்கொண்ட ஆய்வில் சிவகளை அருகே ஸ்ரீமூலக்கரையில் இந்த இரும்பு உருக்கு ஆலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிவகளையில் பழங்காலத்தில் மக்கள் பயன்படுத்திய இரும்பு பொருட்களை தயாரிக்கப்பட்ட இடமாக இது இருந்துள்ளது. அந்த இடத்தில் மண்ணுக்கடியில் புதைந்து காணப்படும் இரும்பு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட அகன்ற உலை அருகே இரும்பு தயாரித்த கழிவுகள் அப்பகுதியில் சிதறிக் காணப்படுகிறது.

இது 3,000 ஆண்டுகள் பழமையான இரும்பு காலத்தில் ஆதிமனிதன் பாறைகளிலிருந்து இரும்பை தனியாக உலையில் வைத்து பிரித்துள்ளான் பிரித்த இரும்பில் கத்தி ,ஈட்டி கோடாரி, வேல், எடை கற்கள் உள்ளிட்ட பல பொருட்களை தயாரித்துள்ளான். மீதமுள்ள கழிவுகளை அப்பகுதியில் கொட்டியதற்கான அடையாளங்கள் காணப்படுவதால் அப்பகுதியில் அகழாய்வு நடந்தால் எத்தனை ஆண்டுகளுக்கு முன் இரும்புகால மனிதனின் இரும்பு உருக்காலை செயல்பட்டது வெளிப்படும் என வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் தோராயமாக கிமு 1200 முதல் கிமு 300-ம் ஆண்டு வரை இரும்பு காலம் வழக்கிலிருந்தது.