மகன் அபகரித்த சொத்த மீட்டு தரக்கோரி வயதான தம்பதியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண் சாப்பிட்டு போராட்டம் நடத்தினர். இதை அறிந்த ஆட்சியர் நேரில் வந்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
திருச்சி நவலூர் குட்டப்பட்டில் வசித்து வருபவர் சின்னப்பொண்ணு. இவரை இவருடைய முதல் கணவர் சுக்குரு கைவிட்ட நிலையில் 1993ஆம் ஆண்டு நாகராஜ் என்பவர் சின்னப்பொண்ணை திருமணம் செய்து கொண்டார். அதனையடுத்து அவர்கள் இருவரும் நவலூர் குட்டப்பட்டு பகுதியில் வசித்து வருகின்றனர்.
சின்னப்பொண்ணுக்கு சேர வேண்டிய சொத்தை முதல் கணவருக்கு பிறந்த மகன் முருகன் என்பவர் அபகரித்து கொண்டதாகவும், தனக்கு கிடைக்க வேண்டிய சொத்தை பெற்று தருமாறு பலமுறை சின்னப்பொண்ணு மனு அளித்துள்ளார். ஆனால் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் சின்னப்பொண்ணு (61) தன் இரண்டாவது கணவர் நாகராஜ் (62) உடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அவர்கள் இருவரும் திடீர் என்று கலெக்டர் அலுவலக வாயிலில் மண் சாப்பிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். வயதான தம்பதியினர் மண் சாப்பிடுவதை கேள்வியுற்று அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் சிவராசு உடனடியாக அவர்கள் இருந்த இடத்திற்கு வந்தார்.
அப்போது ஆட்சியரின் காலில் விழுந்து சின்னப்பொண்ணு கண்ணீர் விட்டார். அவர்களை சமாதானப்படுத்திய மாவட்ட ஆட்சியர் பிரச்சினை குறித்து கேட்டறிந்து அவர்களது மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இச்சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பாசம் மட்டும் போதும் என பெற்ற பிள்ளைகளுக்கு தன் சொத்தை எல்லாம் எழுதி வைத்த பெற்றோர், சொத்தை வாங்கிக்கொண்டு பிள்ளைகள் துன்புறுத்தியதால் மண் தின்று, மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கண்ணீர் வடித்த சம்பவம் அங்கிருந்தவர்களை வேதனையில் ஆழ்த்தியது.