டிரெண்டிங்

திருமயம்: தோசை சுட்டு பரிமாறி வாக்கு சேகரித்த அமமுக வேட்பாளர்!

JustinDurai

உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு தோசை ஊற்றி கொடுத்து பரிமாறி நூதன முறையில் வாக்கு சேகரித்தார் திருமயம் அமமுக வேட்பாளர் முனியராஜ்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களை கவரும் விதமாக பல்வேறு முறைகளில் நூதன பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் முனியராஜ், திருமயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆவாரங்காடு, கடியாபட்டி கண்ணங் காரக்குடி,உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து பரப்புரை மேற்கொண்டார்.

பரப்புரையின் போது தான் வெற்றி பெற்றால், “திருமயம் பெல் நிறுவனத்தில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன், மேலும் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், பொன்னமராவதியை நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும், திருமயம் பகுதி மாணவ, மாணவிகளின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு கலைக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

பின்னர் கடியாபட்டி பேருந்து நிலையத்தில் உள்ள உணவகத்தில் வாக்கு சேகரிக்க சென்ற வேட்பாளர் வாடிக்கையாளருக்கு தோசை ஊற்றி கொடுத்து பரிமாறி நூதன முறையில் வாக்காளர்களை கவரும் விதமாக வாக்கு சேகரித்தார்.