டிரெண்டிங்

தமிழகம் வருகிறார் அமித் ஷா...எதிர்க்கட்சிகளுக்கு பயம் உருவாகியுள்ளது என எல்.முருகன் பேட்டி

தமிழகம் வருகிறார் அமித் ஷா...எதிர்க்கட்சிகளுக்கு பயம் உருவாகியுள்ளது என எல்.முருகன் பேட்டி

webteam

உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 21ஆம் தேதி தமிழகம் வருகை தர உள்ளார்.

தமிழகத்தில் பாஜக- அதிமுக கூட்டணி, நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தலை சந்தித்த நிலையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடரும் என இருக் கட்சி தரப்பிலும் கூறப்படுகிறது. அதே சமயம் வேல் யாத்திரை தொடர்பான பிரச்னையில், அரசின் அனுமதி மறுப்பும் அதனை மீறும் பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக இருந்துவருகிறது. இந்தச் சூழ்நிலையில்தான் அவர் வரும் 21ஆம் தேதி தமிழகம் வருகை தர உள்ளார்.

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக அமித்ஷா நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், தமிழகம் வரும் அவருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர். துறை ரீதியான பணிகள் காரணமாக அமித்ஷா தமிழகம் வர உள்ளதாகவும், தேர்தல் தொடர்பாக பாஜக நிர்வாகிகளை சந்தித்து அவர் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் அமித்ஷா விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியதாவது “ பாஜக மூத்தத் தலைவர் அமித்ஷாவின் தமிழக வருகை எதிர்கட்சிகளுக்கு பயத்தை உண்டாக்கியுள்ளது. அவர், வேல் யாத்திரையில் பங்கேற்க மாட்டார். அதேசமயம் அவர் முதலமைச்சர் பழனிசாமியை சந்திக்க வாய்ப்புள்ளது” என்றார்.