டிரெண்டிங்

அமித்ஷாவின் புதிய வியூகம் : கூட்டணி தலைவர்களுக்கு விருந்து ?

அமித்ஷாவின் புதிய வியூகம் : கூட்டணி தலைவர்களுக்கு விருந்து ?

webteam

பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காது என கணிப்புகள் கூறும் நிலையில் பாஜக தலைவர் அமித்ஷா தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு நாளை விருந்தளிக்கிறார்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ள நிலையில் டெல்லியில் அரசியல் நகர்வுகள் மேலும் வேகம் பெற்றுள்ளன. மத்தியில் பாஜக அணி ஆட்சியமைக்கும் என எல்லா கருத்து கணிப்புகளுமே கூறியுள்ளது. கூட்டணி கட்சிகள் இல்லாமல் பாஜகவுக்கு மட்டும் தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என சில கணிப்புகள் கூறியுள்ளது. இதனால் பாஜக ஆட்சியமைக்க கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவைப்படும் என்ற நிலையில் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா நாளை விருந்தளிக்க உள்ளார். இதற்கு முன்னதாக மத்திய அமைச்சரவை கூட்டமும் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே எதிர்க்கட்சிகள் தரப்பிலும் ஆட்சியமைக்கும் நகர்வுகளை தொடங்கியுள்ளனர். 

எதிர்க்கட்சிகளின் நகர்வுகள் என்ன?

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் சாதகமாக இல்லாத நிலையில் ஆட்சியமைப்பு நகர்வுகளை எதிர்க்கட்சிகள் மேற்கொள்கின்றனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திக்க கொல்கத்தா செல்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அப்படி சந்திக்கும் பச்சத்தில் நேற்றைய சந்திப்புகள் குறித்து மம்தாவிடம் சந்திரபாபு நாயுடு விளக்குவார் என தெரிகிறது. முன்னதாக சந்திரபாபு நாயுடு ஏற்கெனவே சோனியா காந்தி, ராகுல் காந்தி, சரத் பவார், சீதாராம் யெச்சூரி,மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆகியோரை சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழலில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவை பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதற்கு பின்னர் தான் சோனியா காந்தி - மாயாவதி சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. எனவே மத்தியில் பாஜக ஆட்சியமைவதை தடுக்க எதிர்க்கட்சி தலைவர்களுடன் சந்திரபாபு நாயுடு தீவரமாக வியூகம் வகுத்து வருகிறார். மேலும் கருத்து கணிப்புகள் அனைத்தும் பொய்யானவை என்பது இம்முறையும் நிரூபணமாகும் என சந்திரபாபு நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.