தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் கூட்டணியை தேசிய ஜனநாயகக் கூட்டணி என்றே அழைக்க வேண்டும் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, துணை முதல்வர் பன்னீர்செல்வத்திடம் கூறியுள்ளார்.
அதிமுகவுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கிறது பாஜக. அதிமுக கூட்டணியில் அந்தக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, தனி விமானம் மூலம் நேற்று மதுரை விமான நிலையத்துக்கு வந்த அந்தக் கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தனியார் கல்லூரியில் நடைப்பெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றார். அதில் மதுரை, விருதுநகர், தேனி உள்ளிட்ட 18 மக்களவைத் தொகுதி நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் ராமநாதபுரம் பட்டணம் காத்தான் பகுதியில், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, நாகை ஆகிய 4 மக்களவைத் தொகுதிகளுக்கான பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே, மதுரை விமான நிலையத்தில் அமித்ஷாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அப்போது பாரதிய ஜனதா கட்சி போட்டியிடவுள்ள 5 தொகுதிகள் எவை என்பது குறித்து விவாதித்ததாகத் தெரிகிறது. மேலும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதில் தேசிய ஜனநாயக கூட்டணி நடத்தும் காஞ்சிபுரம் கூட்டத்தில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் கட்டாயம் பங்கேற்க வேண்டும் எனக் கூறிய அமித் ஷா, தமிழகத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி அதிமுக நடத்தும் பரப்புரைக் கூட்டங்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரை கூட்டங்களாகவே இருக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வத்திடம் தெரிவித்தார். ஆனால், தமிழகத்தில் எந்தப் பெயரில் கூட்டணி அறிவிக்கப்படும் என்பதை கட்சி தலைமையே முடிவெடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.