நேற்று இரவு பதவி விலகிய நிதிஷ் குமார் இன்று காலை பாஜகவுடன் இணைந்து மீண்டும் பதவி ஏற்றுக் கொண்டார். துணை முதல்வராக பாஜகவின் பீகார் மாநிலத் தலைவர் சுஷில் மோடி பதவியேற்றுக் கொண்டார்.
பீகார் மாநில அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. லாலு பிரசாத்துடனான மோதலில் நேற்று மாலை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், இன்று காலை மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இவருடன் பாஜகவின் சுஷில் மோடி துணை முதலமைச்சராக பதவியேற்றார். லஞ்ச ஊழலுக்கு எதிராக நிதிஷ் குமார் எடுத்த முடிவை வரவேற்பதாக பிரதமர் மோடியும் பாராட்டியிருந்தார்.
நிதிஷ் குமார் முதலமைச்சர் பதவியேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை எதிர்த்து துணை முதல்வரும் லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் போர்க்கொடி தூக்கியுள்ளார். பேரவையில் தனிப்பெரும் கட்சி என்ற வகையில் தங்களையே ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.
இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து தேஜஸ்வி மற்றும் 5 ராஷ்ட்ரீய ஜனதாதள எம்எல்ஏக்களை பேச்சு வார்த்தை நடத்த ஆளுநர் திரிபாதி அழைத்தார். இதைத் தொடர்ந்து தேஜஸ்வி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் ஆளுநர் மாளிகையை நோக்கி நள்ளிரவில் பேரணியாக சென்றனர்.