அமெரிக்காவில் மனைவியை கொன்று, காணாமல் போனதாக நாடகமாடிய கணவர்.. போலிசார் கண்டுபிடித்தது எப்படி...
வர்ஜீனியாவைச் சேர்ந்தவர்33 வயதான நரேஷ் பட். இவரது மனைவி நேபாள நாட்டைச் சேர்ந்த 28 வயதான மம்தா. இருவரும் அமெரிக்காவில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 5 தேதி முதல் தனது மனைவியை காணவில்லை என்று நரேஷ் போலிசாரிடம் புகார் அளித்துள்ளார். அதனால், காணாமல் போன மம்தாவை போலிசார் தேடி வந்தனர். மேலும், காணாமல் போன மம்தா குறித்து நரேஷ் பட்டிடம் போலிசார் தொடர்ந்து விசாரணை செய்துக்கொண்டிருந்தனர். இதில் நரேஷ் போலிசாரிடம் முன்னுக்குப்பின் முரணான தகவல்களைத் தெரிவிக்கவும், போலிசாருக்கு நரேஷ் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை கவனிக்கத்தொடங்கினர்.
இந்நிலையில், நரேஷ் பட் கடந்த ஏப்ரல் மாதம் "மனைவி இறந்த பிறகு திருமணம் செய்ய எவ்வளவு நாட்கள் ஆகும்", "மனைவி இறந்த பிறகு கடன் தள்ளுபடி செய்யப்படுமா?" மற்றும் "வர்ஜீனியாவில் ஒரு மனைவி காணாமல் போனால் என்ன நடக்கும்" என்று தனது வலைதளத்தில் தேடியதைத் தெரிந்துக்கொண்டு அவரிடம் விசாரணை செய்தனர். மேலும், மம்தா காணாமல் போனதாக சொல்லப்பட்ட இரு தினங்களுக்கு முன் உள்ளூர் வால்மார்ட்டில் நரேஷ் மூன்று கத்திகளை வாங்கியது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
அதே போல் மம்தா காணாமல் போனதாக சொல்லப்பட்ட தினத்தில் தரையை சுத்தம் செய்ய சில உபகரணங்களை நரேஷ் வாங்கியதாக தெரிந்ததை அடுத்து அவர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருப்பினும் மம்தாவின் உடல் இன்னும் கிடைக்காத நிலையில், நரேஷ்பட் மம்தாவின் உடலை அப்புறப்படுத்தி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில், அவர் மீது கொலை வழக்கு உடலை மறைத்த வழக்கு என்று இரு வழக்கை பதிவு செய்த வர்ஜீனியா போலிசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.