டிரெண்டிங்

திருமா உடன் அரசியல் கூட்டணியா?: தினகரன் விளக்கம்

rajakannan

நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் குடும்பத்தினரை அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். 

அதிமுக அம்மா அணி சார்பில் அனிதா குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் நிதியுதவியை தினகரன் மற்றும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ''அரசியல் ஆதாயத்தைக் கருத்தில் கொண்டு அனிதா குடும்பத்துக்கு நிதியுதவி அளிக்கவில்லை. அனிதா தற்கொலை போன்ற சம்பவங்கள், தமிழகத்தில் இனி நிகழக் கூடாது. உரிமைகளை யாரிடமும் விட்டுக்கொடுக்காமல் இருப்பதற்கு அனிதா நிகழ்வு ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது. காவிரி, முல்லைப் பெரியாறு உள்ளிட்ட விவகாரங்களில் தமிழக உரிமைகளைப் பாதுகாக்க இனியாவது அனைத்துத் தரப்பினரும் கட்சி பேதமின்று ஓரணியில் திரள வேண்டும்'' என்று தெரிவித்தார்.

மேலும், “அனிதா வீட்டுக்கு திருமாவளவன் என்னுடன் ஆறுதல் கூற வந்ததில் அரசியல் எதுவும் இல்லை. திருமாவளவனை சந்தித்து அனிதா வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தோம்” என்றார். 

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அனிதாவின் சகோதரர் மணிரத்தினம், “அதிமுக தமிழகத்தில் மிகப்பெரிய கட்சி. தமிழகத்தில் அதிமுக இருக்க வேண்டும். அதிமுக அழிய வேண்டும் என்று யாரும் நினைக்கமாட்டார்கள். இரு அணிகளும் ஒன்றாக இணைய வேண்டும். இல்லையென்றால் வேறு சில சக்திகள் தமிழகத்தில் வேரூன்றி விடும். அதிமுக, திமுக இரு பெரிய கட்சிகளும் தமிழகத்தில் இருப்பது ஜனநாயகத்துக்கு நல்லது. மாநில உரிமைகளை ஒவ்வொன்றாய் பறிகொடுத்தார் பின்னால் பெறுவது எந்த உரிமையும் இருக்காது” என்றார்.