5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தத்தை பொறுத்தவரை காங்கிரஸ், பாஜக இடையே கடும் இழுபறி நிலவி வருகிறது. ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் நிலவரம் மாறி மாறி செல்கிறது. ஒரு நேரம் பாஜக முன்னிலை பெறுகிறது. மற்றொரு நேரம் காங்கிரஸ் முன்னிலை பெறுகிறது. இரண்டு கட்சிகளும் கிட்டத்தட்ட 110 இடங்களில் முன்னிலை வகிக்கிறார்கள்.
அதனால், மற்ற கட்சிகளின் ஆதரவை அவர்கள் நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதற்கு அடுத்து அடுத்தபடியாக கோண்ட்வனா கண்டண்ட்ரா கட்சி இரண்டு இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. சமாஜ்வாடி, பகுஜன் சங்கர்ஸ் தாள் கட்சி ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கின்றன.
ஒரு இடத்தில் முன்னிலை வகிக்கும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சி காங்கிரஸ்க்கு ஆதரவை தெரிவித்துள்ளது. ஆனால், அதிக இடங்களில் முன்னிலை வகிக்கும் பகுஜன் சமாஜ் கட்சி தன்னுடைய நிலைப்பாட்டை இன்னும் தெரிவிக்கவில்லை. அக்கட்சியின் தலைவர் மாயாவதி தன்னுடைய கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளிடையே தொகுதி உடன்பாடு எட்டாததால் கூட்டணி அமையவில்லை. சத்தீஸ்கரில் கூட்டணி அமைத்தும், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் தனித்தும் பகுஜன் சமாஜ் போட்டியிட்டது. இதில், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க மாயாவதியின் உதவி தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் முடிவுகள் நெருங்கும் போது தான் மாயாவதியின் பங்களிப்பு எவ்வளவு முக்கியமானது என்று உறுதி செய்ய முடியும்.