டிரெண்டிங்

“சமாஜ்வாதி கட்சி படுதோல்வி அடையும்” - உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்  

EllusamyKarthik

403 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே களம் காண்கின்றன. இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எதிர்வரும் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி படுதோல்வி அடையும் என தெரிவித்துள்ளார். 

இதனை டைம்ஸ் நவ் ஊடக நிறுவனத்திற்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். 

“ஆளும் பாஜக அரசுக்கு எதிரான சூழல் இங்கு இல்லை. எப்படியும் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளை பாஜக கைப்பற்றும். மார்ச் 10 அன்று வெளியாகவுள்ள தேர்தல் முடிவில் அது வெளிப்படும். அதனை மனதளவில் எதிர்கொள்ள சமாஜ்வாதி தயாராகிவிட்டது. இது அந்த கட்சிக்கு அவமானகரமான தோல்வியாக அமையும். 

நான் கோரக்பூர் தொகுதியில் போட்டியிடாமல் வேறு எந்த தொகுதியிலாவது போட்டியிட்டிருந்தால் அதையும் விமர்சகர்கள் சாடியிருப்பார்கள். தேர்தலில் ஆதாயம் பெறுவதற்காக குடும்ப அரசியலில் ஈடுபட்டு வரும் அகிலேஷ் யாதவ் சாதி மற்றும் மதத்தை பயன்படுத்தி வருகிறார். குற்றவாளிகளுக்கும், கலவரம் செய்கின்ற குண்டர்களுக்கும் அவர் தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்துள்ளார்” என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 

அதே நேரத்தில் முலாயம் சிங் யாதவின் மருமகள் அபர்ணா யாதவ் பாஜக-வில் இணைந்துள்ளதை வரவேற்றுள்ளார் யோகி ஆதித்யநாத். தேசத்தின் முன்னேற்றத்தின் மீது பிரதமர் மோடி கொண்டுள்ள பார்வையை கண்டு அபர்ணா அவரை பின்பற்றும் நோக்கில் பாஜக-வில் இணைந்துள்ளார் என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.