டிரெண்டிங்

நாளை அகிலேஷ் - மாயாவதி கூட்டணி அறிவிப்பு

நாளை அகிலேஷ் - மாயாவதி கூட்டணி அறிவிப்பு

rajakannan

சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் இடையிலான கூட்டணி பற்றிய அறிவிப்பை அகிலேஷ் யாதவும், மாயாவதியும் நாளை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கட்சிகள் இடையிலான கூட்டணி குறித்த தகவல்கள் கடந்த ஆண்டு முதலே வந்த வண்ணம் உள்ளது. சட்டப்பேரவையில் தனித்தனியாக போட்டியிட்டு இரு கட்சிகளும் பாஜகவிடம் படுதோல்வி அடைந்தது. பாஜகவை வீழ்த்தும் நோக்கில் முதல் முறையில் கடந்த நடைபெற்ற இடைத்தேர்தலில் மாயாவதியுடன் கூட்டு சேர்ந்தார். இந்த கூட்டணிக்கு கைமேல் பலன் கிடைத்தது. முதல்வர், துணை முதல்வர் பதவி வகித்த தொகுதிகளையே பாஜக இந்தக் கூட்டணியிடம் இழந்தது. 

இதனால், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணி தொடரும் என்று பேசப்பட்டது. வரும் ஜனவரி 15ம் தேதி மாயாவதி பிறந்தநாளன்று இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று செய்திகள் வெளியாகி இருந்தது. இதற்காக கடந்த சில வாரங்களாகவே இருகட்சிகளிடையே தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. அதேபோல், இந்தக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இடமில்லை என்றும் பேசப்பட்டது. ராஷ்ட்ரிய லோக் தாள், நிஷாத் கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளை அரவணைத்து தேர்தலை சந்திக்க இருவரும் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில், அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி இருவரும் கூட்டாக நாளை செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவதோடு, தொகுதி உடன்பாடு குறித்து பேசுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 

உத்தரப் பிரதேசத்தில் அதிக இடங்களை கைப்பற்றும் கட்சிகள்தான், யார் மத்தியில் ஆட்சியை பிடிப்பார்கள் என்பதை தீர்மானிக்கும் இடத்தில் இருப்பார்கள். 2014 மக்களவை தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் அப்னா தாள் கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜக 73 இடங்களை கைப்பற்றி அசத்தியது. தனி மெஜாரிட்டியில் யாருடைய உதவியும் இல்லாமல் ஆட்சி அமைக்க உத்தரபிரதேசமே பாஜகவுக்கு கை கொடுத்தது.

அதனால், அகிலேஷ் யாதவ் - மாயாவதி இடையிலான இந்தக் கூட்டணி வருகின்ற மக்களவை தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் என்றே தெரிகிறது.