பிரதமர் மோடியை 72 ஆண்டுகள் தடை செய்ய வேண்டும் என்று சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
மேற்குவங்க மாநிலத்தின் செரம்பூர் தொகுதியில் நேற்று நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 40 எம்.எல்.ஏக்கள் பாஜகவுடன் தொடர்பில் உள்ளனர். திரிணாமூல் எம்.எல்.ஏக்கள் மம்தாவை விட்டு விலகுவார்கள். ஏனெனில் அவர்களுடைய நம்பிக்கையை நீங்கள் உடைத்துவிட்டீர்கள். அதேபோல், மே 23ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வந்தவுடன் எல்லா பக்கமும் தாமரை மலர்ந்திருக்கும்’ என்று பேசினார்.
மோடியின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அகிலேஷ் யாதவ், ‘மோடிக்கு 72 ஆண்டுகள் தடைவிதிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தன்னுடைய ட்விட்டரில், “வளர்ச்சியைதான் மக்கள் கேட்கிறார்கள்.. பிரதமரின் அவமானகரமான பேச்சினை கேட்டீர்களா?. 125 கோடி மக்களின் நம்பிக்கையை இழந்தபின்னர், அவர் நீதிக்கு புறம்பான வகையில் 40 எம்.எல்.ஏக்கள் தங்கள் வசம் உள்ளதாக கூறுகிறார். அவருடைய கருப்பு பண மனநிலை இதில் வெளிப்படுகிறது. அவர் 72 மணி நேரத்திற்கு மட்டுமல்ல 72 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட வேண்டும்” என்று அகிலேஷ் குறிப்பிட்டுள்ளார்.
பிரச்சாரத்தின் போது வரம்புமீறி பேசும் தலைவர்களுக்கு தேர்தல் ஆணையம் 3 நாட்களுக்கு தடைவிதிப்பது வழக்கம். அதனை குறிப்பிட்டே 72 மணி நேரம் என அகிலேஷ் தெரிவித்துள்ளார்.