டிரெண்டிங்

அதிமுக அணிகள் இணைப்பு... நமது எம்ஜிஆரில் கடும் விமர்சனம்

அதிமுக அணிகள் இணைப்பு... நமது எம்ஜிஆரில் கடும் விமர்சனம்

Rasus

அதிமுக அணிகள் நேற்று இணைந்துள்ள நிலையில், வெறும் பதவி சுகத்துக்காக சுற்றி வருபவர்கள் விரைவில் மண்ணைக் கவ்வி, முகத்தில் கரியை பூசிக்கொள்ளப் போகிறார்கள் என்று அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரில் விமர்சன கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைவிற்கு பின் பிரிந்த அதிமுக அணிகள் நேற்று மீண்டும் இணைந்தன. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியும் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்-சும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி இணைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டனர். மேலும், அதிமுக-வின் பொதுக்குழுவை விரைவில் கூட்டி பொதுச்செயலாளர் சசிகலாவை நீக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக அணிகள் இணைப்பு குறித்து, நமது எம்.ஜி.ஆரில் விமர்சன கட்டுரை எழுதப்பட்டுள்ளது. அதில், வெறும் பதவி சுகத்திற்காக சுற்றி வருபவர்கள் விரைவில் மண்ணைக் கவ்வி, முகத்தில் கரியை பூசிக்கொள்ளப் போகிறார்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நடக்கப் போவது தெரியாமல் விட்டில் பூச்சிகளாக தங்கள் பொழுதுகளை துதிபாடிகள் போக்கிக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காட்சிகள் கலையும் நேரம் என்று எழுதப்பட்டுள்ள அந்த கட்டுரையில், துதிபாடிகள் களைப்படைந்து தண்ணீர் தேடி ஓடிவிடுவார்கள் என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது.