தேனி மக்களவைத் தொகுதிக்குப்பட்ட பகுதிகளில் வாக்காளர்களுக்கு அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்துள்ளது.
தேனி, போடிநாயக்கனூர் தொகுதிகளுக்குட்பட்ட மேல சொக்கநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலை சரிபார்ப்பது போன்று, வீடுதோறும் சென்று வாக்கு ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் அதிமுகவினர் பட்டுவாடா செய்ததாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. சொக்கநாதபுரம் பேரூராட்சியின் முன்னாள் தலைவர் சவீதா அருண்பிரசாத், பணப்பட்டுவாடா செய்வதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக அமமுக சார்பில் போடிநாயக்கனூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல, தமிழ்நாடு ஃபார்வர்ட் கட்சியின் சார்பில் தேனி மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்துள்ள மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ், இவ்விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.