டிரெண்டிங்

அதிமுகவில் அனல் பறக்கும் முதல்வர் வேட்பாளர் யுத்தம்: இன்று செயற்குழு கூட்டம் !

webteam



அதிமுக செயற்குழு இன்று கூடும் நிலையில் முதல்வர் வேட்பாளர் குறித்து இக்கட்சியில் கடந்த சில மாதங்களாக நடந்து வரும் நிகழ்வுகளை சற்றே பின்னோக்கி பார்க்கலாம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இதில் யாரை முதல்வர் வேட்பாளராக களமிறக்குவது என்ற கேள்விகள் ஆளும் கட்சியான அதிமுகவில் எழுந்துள்ளது. தேர்தலுக்கு பிறகு எம்.எல்.ஏக்கள் கூடி முதலமைச்சரை தேர்வு செய்வார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜு கடந்த ஜூலையில் கூறியது அதிர்வலைகளை ஏ‌ற்படுத்திய நிலையில் "எடப்பாடியார் என்றும் முதல்வர்" என டிவிட்டரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதிவிட்டது விவாதத்திற்கு வித்திட்டது. இதையடுத்து போஸ்டர் யுத்தமும் தொடங்கியது.

ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான பெரியகுளத்தில் தமிழகத்தின் நிரந்தர முதல்வர், 2021ஆம் ஆண்டு தேர்தலில் முதல்வர் போன்ற வாசகங்களோடு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதேபோல் கோவை உள்ளிட்ட இடங்களில் எடப்பாடியாரே நிரந்தர முதலமைச்சர் என போஸ்டர்கள் தென்பட்டன. இதன் காரணமாக கட்சியில் சலசலப்பு ஏற்பட்ட நிலையில், சென்னையில் மூத்த அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் கடந்த சுதந்திர தினத்தன்று ஆலோசனை நடத்தினர்.

மூத்த அமைச்சர்கள் குழு ஓ.பன்னீர்செல்வம் வீட்டிற்கும், எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கும் மாறிமாறிச் சென்று ஆலோசனை நடத்தினர். இதையடுத்து முதல்வர் வேட்பாளர் குறித்து யாரும் கருத்து தெரிவிக்கக் கூடாது எனக் கூறி சர்ச்சைகளுக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. எனினும் இதன் பின்பும் கருப்பண்ணன், ஓ.எஸ்.மணியன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியே மீண்டும் முதல்வர் ஆவார் எனக் கூறினர்.

இதையடுத்து நடந்த அதிமுக உயர் நிலை கூட்டத்தில் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.க்கு ஆதரவாக தனித்தனியே முழக்கங்கள் எழுந்தன. ஓ.பன்னீர்செல்வம் வந்தபோது, "ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு" என்றும், எடப்பாடி பழனிசாமி வந்தபோது, "நிரந்தர முதலமைச்சர் எடப்பாடியார்" என்றும் முழக்கங்கள் எழுந்தன. கடந்த 18ஆம் தேதி நடந்த இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசித்ததாக அறிக்கை வெளியானாலும், இதில் முதல்வர் வேட்பாளர் உட்பட பல அம்சங்களில் காரசார விவாதங்கள் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இவற்றின் தொடர்ச்சியாக இன்று நடைபெறும் செயற்குழு பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது