டிரெண்டிங்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளராக மதுசூதனன் அறிவிப்பு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளராக மதுசூதனன் அறிவிப்பு

rajakannan

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளராக அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதிமுகவின் ஆட்சிமன்றக் குழு கூட்டம், ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில், முதலமைச்சர், துணை முதலமைச்சர், வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜூ, வேலுமணி மற்றும் மதுசூதனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஆர்.கே.நகரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதிமுக சார்பில் 27 பேர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் மதுசூதனன், பாலகங்கா, கோகுல இந்திரா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுவதாக கருதப்பட்டது. இறுதியில் மதுசூதனனை வேட்பாளராக நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

திமுக வேட்பாளராக மருது கணேஷ் அறிவிக்கப்பட்டார். டிடிவி தினகரனும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதனால் அதிமுகவின் வேட்பாளர் அறிவிப்பு உட்கட்சி குழப்பத்தால் தாமதமாவதாக கூறப்பட்டது. இந்த நிலையில், மதுசூதனன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால், கட்சியில் நிலவிய குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கருதப்படுகிறது.

கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, அதிமுக இரண்டாக பிளவுபட்டிருந்தது. அப்போது சசிகலா தலைமையிலான அதிமுக அம்மா அணியின் சார்பாக டிடிவி தினகரனும், ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் சார்பாக மதுசூதனனும் போட்டியிட்டனர். அதனால் தினகரனுக்கு போட்டியாக மதுசூதனனையே அதிமுக வேட்பாளராக அக்கட்சியின் ஆட்சிமன்றக் குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து, திமுக வேட்பாளர் மருது கணேஷ், டிடிவி தினகரன், அதிமுக வேட்பாளர் மதுசூதனன் ஆகியோரிடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

அதிமுக உயர்மட்ட ஆலோசனைக் குழு கூட்டம் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் ஆட்சிமன்றக் குழு மாற்றி அமைக்கப்பட்டது. ஆட்சிமன்றக் குழுவில் முதலமைச்சர் பழனிசாமி, வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, பா.வளர்மதி ஆகியோரை சேர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே ஆட்சிமன்றக் குழுவில் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், ஜஸ்டின் செல்வராஜ், தமிழ்மகன் உசேன், பி.வேணுகோபால் ஆகியோர் உள்ளனர். மொத்தம் 9 பேர் கொண்ட புதிய ஆட்சி மன்றக் குழு அறிவிக்கப்பட்டது.

ஆர்.கே.நகர் தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரம் இந்த ஆட்சிமன்றக் குழுவுக்கு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. நவம்பர் 29-ம் தேதி ஆட்சிமன்றக் குழு ஒன்று கூடி வேட்பாளரை அறிவிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. நேற்று நடைபெறுவதாக இருந்த ஆட்சிமன்றக் குழு கூட்டம் தஞ்சை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கூட்டத்தால் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து, இன்று ஆட்சிமன்றக் குழு கூட்டம் நடைபெற்றது.