பிப்ரவரி 21 முதல் மக்களை சந்திக்கவுள்ள கமலில் பயணத்திட்டத்துக்கு ‘நாளை நமதே’ என பெயரிடப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 7ம் தேதி அரசியல் வருகையை உறுதி செய்த கமல்ஹாசன் தமிழகம் முழுக்க சுற்றுபயணம் செய்ய இருப்பதாக அறிவித்தார். பிப்ரவரி 21ஆம் தேதி கட்சியின் பெயரை அறிவித்து, தனது அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக தெரிவித்திருந்தார்.
அதன்படி வரும் பிப்ரவரி 21ஆம் தேதி ராமேஸ்வரம் கலாம் வீட்டில் இருந்து கமல் அரசியல் பயணத்தை தொடங்குகிறார். இதற்கு காரணம், கலாமிற்கு பல கனவுகள் இருந்தன, அவரை போல பல கனவுகளை கொண்டவன் தான் என அவர் விளக்கமளித்தார். இந்நிலையில் மக்களை சந்திக்கவுள்ள கமலில் பயணத்திட்டத்துக்கு நாளை நமதே என பெயரிடப்பட்டுள்ளது.
வார இதழ் ஒன்றில் கமல்ஹாசன் எழுதிவரும் தொடரில் இந்த தகவலைக் குறிப்பிட்டுள்ளார். இன்று யாருடையதாகவோ உள்ள தமிழகத்தை, நாளை தமிழர்களுடையதாக, மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழக்கூடிய ஒரு பிரதேசமாக மாற்றிக்காட்டுவதற்கான தங்களின் கனவே இந்த நாளை நமதே எனத் தெரிவித்துள்ளார். மேலும், அரசியல் பயணமாகச் செல்லும் கமல்ஹாசன், முதல்கட்டமாக ஒரு கிராமத்தைத் தத்தெடுத்து மேம்படுத்தப்போவதாகவும் அறிவித்துள்ளார். அதன் மூலம் கிடைக்கும் அனுபவப் பாடத்தைக் கொண்டு அடுத்தடுத்த கிராமங்களில் பணி முடிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார். அதைச் செயல்படுத்துவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இதைப்பற்றி பேச இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர்களை தமிழக கிராமங்களை நோக்கி அழைக்க இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், நிச்சயம் ஆர்வத்தோடு வருவார்கள் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.