டிரெண்டிங்

ஈபிஎஸ்-ஓபிஎஸ் இடையே மீண்டும் பிளவா?: மைத்ரேயன் பதில்

ஈபிஎஸ்-ஓபிஎஸ் இடையே மீண்டும் பிளவா?: மைத்ரேயன் பதில்

webteam

அதிமுகவின் முப்பெரும் விழாவிற்கு ஓபிஎஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் அழைக்கப்படாததற்கு, விழா ஒருங்கிணைப்பாளரே காரணம் என்று அதிமுகவின் மைத்ரேயன் கூறினார்.

மதுரையில் நடந்த அதிமுகவின் முப்பெரும் விழாவிற்கு ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுகவின் பல தலைவர்களுக்கு அழைப்பு விடுக்காதது அதிமுகவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, அதிமுகவின் மைத்ரேயன் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், மதுரையில் நடந்த நிகழ்ச்சிக்கு ஓபிஎஸ் அழைக்கப்பட்டாரா அல்லது இல்லையா என்று எனக்கு தெரியாது. பொதுவாக கழகக் கொடிய ஏற்றுவது மகிழ்ச்சியான நிகழ்ச்சி. கட்சியின் அடிப்படைதொண்டன் கூட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யலாம். தற்போது நடந்துள்ள முப்பெரும் விழா, அதாவது, இரட்டை இலை சின்னம் மீட்கப்பட்டதற்கான மகிழ்ச்சியை வெளிப்படுத்து நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை சாதாரண கட்சி தொண்டன் ஏற்பாடு செய்யவில்லை. அமைச்சரும் மாவட்ட செயலாளருமான ஒருவர் ஏற்பாடு செய்திருக்கிறார். இரட்டை இலை சின்னம் மீட்கப்பட்டதை கொண்டாடும் நிகழ்ச்சி என்றால், இரட்டை இலை என்பது கட்சியின் வரலாற்றில் எத்தகைய முக்கியதுவம் வாய்ந்தது, பெரிய சட்டப் போராட்டத்திற்கு பிறகு மீட்டுள்ளோம். சின்னத்திற்கான விழா என்றால் அது பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய விழா. இவ்விழாவிற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளரை அழைத்திருக்க வேண்டும், அனைத்து ஒருங்கிணைப்பாளர்களை அழைத்திருக்க வேண்டும்.

சின்னத்தைப் பெருவதற்காக கடந்த 8 மாத காலமாக டெல்லியில் சட்டப் போராட்டம் நடத்திய நான் உட்பட, கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன், அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் தலவாய் சுந்தரம் உள்ளிட்ட எங்களுக்கு விழா குறித்து எந்த தகவலும் கொடுக்கவில்லை. இது எங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்விழா தொடர்பாக அனைவரையும் அழைத்து, அரவணைத்து செய்திருக்க வேண்டும் என்பதே என் கருத்து. இந்த தவறுக்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களே பொருப்பெடுத்துக்கொள்ள வேண்டும். 

கட்சியில் ஒரு முக்கியமான பெரிய தலைவர் இல்லாத, கட்சியில் கூட்டு தலைமை உள்ள தற்போதைய கால கட்டத்தில்,  முன்னர் சொன்னது போல வழிகாட்டுதல் குழு அமைத்து, குழுவின் வழிகாட்டுதல் படி அனைத்தையும் செய்ய வேண்டும் என்பதே எங்கள் எல்லோருடைய எதிர்பார்ப்பும். 

ஆர்.கே.நகரில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளரை கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் முறையாக முடிவு செய்வார்கள். ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் என்பது முக்கியமான ஒன்று, இரு அணிகளும் ஒன்றாக இணைந்த பிறகு, இரட்டை இலை சின்னம் பெறப்பட்ட பிறகு நடக்கும் முதல் இடைத்தேர்தல் இது. குறிப்பாக ஜெயலலிதாவின் தொகுதி. ஆதலால் கட்சியின் அனைத்து நிர்வாகிகளும், தொண்டர்களும் வெற்றிக்காக பாடுபடுவார்கள் என்று கூறினார்.