அதிமுகவிலிருந்து கே.சி.பழனிசாமி நீக்கப்பட்டது தொடர்பான முடிவை அதிமுக தலைமை மறுபரீசிலனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளிப்போம் என்று அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். உடனடியாக அந்த நாளே அவர் அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதுதொடர்பாக ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், கட்சியின் கொள்கைகளுக்கும் குறிக்கோளுக்கும் முரண்பாடான வகையில் செயல்பட்டதால் கே.சி.பழனிசாமி நீக்கப்பட்டுவதாக தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, அதிமுகவில் இருந்து தன்னைநீக்கியதற்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கே.சி.பழனிசாமி தெரிவித்திருந்தார்.
ஓபிஎஸ் சசிகலாவை எதிர்த்து போக்கொடி உயர்த்திய நேரத்தில் சசிகலாவை எதிர்த்து முதன் முதலில் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தவர் கே.சி. பழனிசாமி. இதனால் கே.சி.பழனிசாமி நீக்கப்பட்டதற்கு கட்சிக்குள்ளே ஒரு சிலர் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரும் கட்சி தலைமையிடம் இதுகுறித்து முறையிட்டதாகவும் தெரிகிறது. எனவே அதிமுக கட்சி தலைமை, கே.சி.பழனிசாமி நீக்கப்பட்ட விவகாரத்தில் முடிவை மறுபரிசீலனை செய்யலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.