ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கடவுள் தண்டித்துவிட்டதாக ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
ஆந்திர பிரதேசத்தில் மக்களவைத் தேர்தலுடன், சட்டசபைக்கான தேர்தலும் நடைபெற்றது. இதில், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 இடங்களை பிடித்து அபார வெற்றி பெற்றது. ஆட்சியில் இருந்த தெலுங்கு தேசம் கட்சி வெறும் 23 இடங்களில்தான் வெற்றி பெற்றது.
அதேபோல், மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 22 இடங்களில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் வென்றுள்ளது. தெலுங்கு தேசம் வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கு தேசம் கட்சிக்கு இது மிகப்பெரிய தோல்வி ஆகும்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, “சந்திரபாபு நாயுடு சட்டவிரோதமாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.பிக்கள் மூன்று பேரை அபகரித்தார். ஆனால், இப்பொழுது அவரது கட்சிக்கு 3 எம்.பிக்கள் மட்டுமே கிடைத்துள்ளனர். சந்திரபாபு நாயுடுவை கடவுள் தண்டித்துவிட்டார்” என்று கூறியுள்ளார்.
மேலும், “ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பெற்றுள்ள வெற்றி பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது. 50 சதவீதம் வாக்குகள் பெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அடுத்த 5 ஆண்டுகளில் நாங்கள் எப்படி செயல்பட போகிறோம் என்பதை பொறுத்துதான் 2024இல் எங்களது வெற்றி தீர்மானிக்கப்படும்.
அரசாங்கத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்படும். கொடுத்த வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவோம். நாடே திரும்பி பார்க்கும் அளவிற்கு நல்லாட்சியை நடத்துவோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.