மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட பங்களாதேஷ் நடிகர், உடனடியாக வெளியேற வேண்டும் என்று இந்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பங்களாதேஷை சேர்ந்த பிரபல நடிகர் காஸி அப்துன் நூர். இவர் நடித்த, ராணி ரஷ்மோனி என்ற பெங்காலி தொடர் புகழ்பெற்ற ஒன்று. இந்நிலை யில் இவர், டும் டும் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சவுகதா ராய்-க்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார். மோட்டார் சைக்கிள் பேரணியிலும் கலந்துகொண்டார்.
இது தேர்தல் விதிமீறல் என்றும் உடனடியாக அவர் விசாவை கேன்சல் செய்துவிட்டு அவரை பங்களாதேஷூக்கு அனுப்ப வேண்டும் என்றும் பாஜக புகார் கூறியது. இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் அவரை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, மற்றொரு பங்களாதேஷ் நடிகரான பெர்டோஸ் அகமதுவும் திரிணாமுல் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் விசாவை ரத்து செய்த இந்திய உள்துறை அமைச்சகம், அவரை வெளியேற உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் இந்தியாவை விட்டு வெளியேறினார்.
தேர்தல் பிரசாரம் செய்ததற்கு அவர் இப்போது மன்னிப்பு கேட்டுள்ளார். ’’நண்பர்கள் மற்றும் நடிகை பாயல் கேட்டுக்கொண்டதால் அவர்களுடன் பிரசாரத்துக்குச் சென்றேன். வேட்பாளர் யார் என்று கூட எனக்குத் தெரியாது. இருந்தாலும் அது தவறு என்பதை புரிந்து கொண்டேன்’’ என்று அவர் கூறியுள்ளார்.
பங்களாதேஷ் நடிகர்கள் பலர் மேற்கு வங்க சினிமா மற்றும் தொடர்களிலும் நடித்துவருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.