டிரெண்டிங்

ஜெ. மறைவு முதல் தற்போது வரையிலான அதிமுகவின் டைம்லைன்

ஜெ. மறைவு முதல் தற்போது வரையிலான அதிமுகவின் டைம்லைன்

webteam

அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவு முதல், தற்போதுவரை நடைபெற்ற நிகழ்வுகளின் கால அட்டவணை.

2016 டிசம்பர் 5 ஆம் தேதி அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்தார். அன்று இரவே தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவியேற்றார்.

டிசம்பர் 29: அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூடியது. இதில் அதிமுகவின் பொதுச்செயலாளராக விகே சசிகலா நியமிக்கப்பட்டார்.

2017 பிப்ரவரி 5: அதிமுகவின் சட்டப்பேரவை தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

பிப்ரவரி 7: ஜெயலலிதாவின் நினைவிடத்தில் தியானம் செய்த பன்னீர்செல்வம் சசிகலாவுக்கு எதிராக பத்திரிகையாளர்களிடம் புகார்களை தெரிவித்தார்.

பிப்ரவரி 14: சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பிப்ரவரி 15: அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் நியமனம் செய்யப்பட்டார்.

பிப்ரவரி 16: சசிகலா சிறைக்கு சென்றதை அடுத்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

பிப்ரவரி 18: எடப்பாடி பழனிசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.

மார்ச் 9: ஆர்கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியானது.

மார்ச் 12: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலைச்சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தனர்.

மார்ச் 23: அதிமுக பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த இரு அணிகளுக்கும் தேர்தல் ஆணையம் தடை விதித்தது.

ஏப்ரல் 10: தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

ஏப்ரல் 19: டிடிவி தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைப்பதாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் முடிவு செய்தனர்.

ஏப்ரல் 25: இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுத்ததாக டிடிவி தினகரனை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

மே 10: சசிகலா குடும்பத்தினரை விலக்கினால் பேச்சுவார்த்தைக்குத் தயார் என ஓ.பன்னீர்செல்வம் அணியினர் அறிவிப்பு வெளியிட்டனர்.

ஆகஸ்டு 10: அதிமுக துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனை நியமித்தது செல்லாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய கூட்டத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆகஸ்டு 14: மதுரை மேலூரில் டிடிவி தினகரன் நடத்திய எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் 20 சட்டமன்ற உறுப்பினர்களும், 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

ஆகஸ்டு 17: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.

ஆகஸ்டு 21: முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்தன. அன்று மாலையிலேயே துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்.

ஆகஸ்டு 21 முதல் இன்று வரை: அதிமுக நிர்வாகிகளை டிடிவி தினகரன் தொடர்ந்து நீக்கி வருகிறார்.

ஆகஸ்டு 28: ஜெயா டிவியும், நமது எம்ஜிஆரும் அதிமுகவின் சொத்து என்பது உள்ளிட்ட 4 தீர்மானங்கள் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. அன்றைய தினம் மாலையே அதிமுகவின் பொதுக்குழு செப்டம்பர் 12 ஆம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டது.

செப்டம்பர் 11: டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் தொடர்ந்த வழக்கில் பொதுக்குழுவைக் கூட்ட தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்படுமென்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று நடைபெறும் பொதுக்குழுவில் சசிகலா மற்றும் தினகரன் உள்ளிட்டோர் பதவியில் இருந்து நீக்கப்படப்பட வாய்ப்புள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.