குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்திற்கு அதிமுக அம்மா அணி ஆதரவு தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை மாதம் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுக்கள் கடந்த 14-ஆம் தேதி முதல் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந்தை அறிவித்தார் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா. ராம்நாத் கோவிந்த்துக்கு ஆதரவு அளிப்பதாக தெலுங்கு தேசம் மற்றும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிகள் ஏற்கனவே தெரிவித்துவிட்டன.
இந்நிலையில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்திற்கு அதிமுக அம்மா அணி ஆதரவு தெரிவித்துள்ளது. சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி, எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்திற்கு ஆதரவு அளிக்குமாறு பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டார். இதனையடுத்து எம்எல்ஏ-க்களுடன் ஆலோசனை நடத்தினோம். இதில் குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த்திற்கே ஆதரவு அளிப்பதாக ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது" என்றார். இருப்பினும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் ஆதரவு குறித்த நிலைப்பாடு இன்னும் தெரியவரவில்லை.