அதிமுகவுக்கு ரத்தமும் சதையுமாக உள்ள தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர் என்று எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற தினகரன் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக டிடிவி தினகரன் இன்று பதவியேற்றுக் கொண்டார். தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபால் தினகரனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அப்போது செந்தில் பாலாஜி, வெற்றிவேல் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.
எம்.எல்.ஏ.வாக பதவியேற்ற பின்னர் தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தினகரன், மனதளவில் பல அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் எங்கள் பக்கம் உள்ளனர் என்று கூறினார். மேலும் அவர் பேசுகையில், “சசிகலா தலைமையிலான இயக்கமே உண்மையான அதிமுக என ஆர்.கே. நகர் மக்கள் தீர்ப்பு வழங்கி உள்ளனர். அதிமுகவுக்கு ரத்தமும் சதையுமான உள்ள தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர். பதவியில் இருக்க வேண்டும் என்ற ஐந்தாறு பேரின் சுயநலத்திற்கு துணைப் போக வேண்டாம்.
சட்டமன்ற வாக்கெடுப்பின் போது எங்களது ஸ்லீப்பர் செல்கள் செயல்படுவார்கள். ஜனவரி 20-ம் தேதிக்குள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் தீர்ப்பு வரும். வரலாற்றில் துரோகத்திற்கு என்றைக்குமே வெற்றி கிடைத்ததில்லை” என்றார்.