டிரெண்டிங்

”புலிகள் என நினைத்து கொள்ளாதீர்கள்” தேமுதிகவை கடுமையாக விமர்சித்த ’நமது அம்மா’ நாளிதழ்!

webteam

கூட்டணியிலிருந்து விலகிய தேமுதிகவை கடும் சொற்களால் விமர்சித்து அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான "நமது அம்மாவில்" கட்டுரை வெளியாகியுள்ளது.

தொகுதி உடன்பாடு எட்டப்படாத காரணத்தால் அதிமுகவில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்தது. 2021 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்ட கழக செயலாளர்களுடனான அவசர ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்தின் அடிப்படையில் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அறிவித்தது.

மேலும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி பாமகவின் ஸ்லீப்பர் செல் என்றும், அதிமுக டெபாசிட் இழக்கும் எனவும் தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் அக்கட்சி தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆவேசத்துடன் கருத்து தெரிவித்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழில் தேமுதிக குறித்து கடுமையான கட்டுரை வெளியாகியுள்ளது.

துளிகள் வெளியேறினால் கடலுக்கு நஷ்டம் இல்லை என தொடங்கும் அந்தக் கட்டுரையில், தேமுதிகவினர் தங்களை புலிகள் என நினைத்துக்கொண்டு அளவு கடந்து பேசுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு கூட்டணி அமைத்து, அக்கட்சிக்கு சட்டமன்றத்தை காட்டியதும், கட்சிக்கு அங்கீகாரம் மற்றும் முரசு சின்னத்தை பெற்றுக் கொடுத்ததும் அதிமுக தான் என கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.