ஜல்லிக்கட்டுக்கு மக்கள், இளைஞர்கள் என லட்சக்கணக்கானோர் ஒன்று கூடி போராடியது போல் காவிரி பிரச்னைக்காக போராட வேண்டும் என மக்களவை துணை சபாநாயகரும் அதிமுக எம்.பியுமான தம்பிதுரை கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ஜல்லிக்கட்டுக்கு மக்கள், இளைஞர்கள் ஒன்று கூடியது போல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் மக்கள் இயக்கமாக ஒன்று கூட வேண்டும். மக்கள் இயக்கத்தின் போராட்டம் சட்டம் ஒழுங்கை மீறாமல் இருக்க வேண்டும்’ என்றும் தம்பிதுரை வலியுறுத்தினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர தயார் என்று கூறிய அவர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதற்கு ஆதரவு அளிக்க காங்கிரஸ் தயாரா என்று கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “காவிரி பிரச்னையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அதிமுக தயாராக இருக்கிறது. திமுகவின் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்குமா? சோனியாவும், ராகுல் இது குறித்து அறிவிக்கை வெளியிடட்டும். திமுக காங்கிரஸிடம் பேசி ஆதரவு கேட்கட்டும். காங்கிரஸ் கட்சியும் சேர்ந்தால் தான் எண்ணிக்கை பலம் கிடைக்கும். மற்ற பிரச்னைகளுக்காக பொதுவாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரமுடியாது. காவிரி பிரச்னைக்காக மட்டுமே கொண்டுவருவோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் தொடர்ந்து முடக்குவோம்” என்றார் தம்பிதுரை.
‘மத்திய அரசு வேறு, மாநில அரசு வேறு. அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் சம்பந்தமில்லை’ என்று கூறிய அவர் அரசியலுக்காகவே திமுக போராட்டம் அறிவித்துள்ளது என்று குற்றம்சாட்டினார்.