முத்தலாக் விவகாரத்தில் பாஜக தனது மதவாத செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்புகிறது என்று மக்களவையில் பேசிய அதிமுக எம்.பி. அன்வர் ராஜா குற்றம்சாட்டினார்.
மக்களவையில் கடும் அமளிக்கு இடையே முத்தலாக் மசோதாவை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று தாக்கல் செய்தார். முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்வோருக்கு கிரிமினல் குற்றமாக கருதி 3 ஆண்டு சிறைத்தண்டனை முதல் அபராதமும் விதிக்க இந்த மசோதா வழிவகை செய்கிறது. இந்த மசோதா தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய அன்வர் ராஜா சீர்திருத்தத்தை சமுதாயத்திற்கு உள்ளே இருந்து கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தினார்.
அன்வர் ராஜா பேசுகையில், “முத்தலாக் மசோதாவில் 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கும் விதிக்கு, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக அரசு கடிதம் எழுதி உள்ளது. முத்தலாக் விவகாரத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது. முஸ்லீம் தனிச்சட்டத்தின்படி, முத்தலாக் 3 முறையில் செய்யப்பட வேண்டும். 3 முறையில் செய்யப்படாததால் வரும் விளைவுகள் தான் இது. நாடாளுமன்றம் வேண்டுமென்றால் ஒரு சட்டம் இயற்றிக் கொள்ளலாம் என்றுதான் உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிறது. கிரிமினில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் எந்த இடத்திலும் சொல்லவில்லை. அப்படி கிரிமினல் நடவடிக்கையாக கருதி 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிவிட்டால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் யார் பணம் தருவது. அதற்கு தான் விவாகரத்து செய்யப்படும் போது இஸ்லாம் சட்டத்தில் ’ஒன் டைம் செட்டில்மெண்ட்’ முறை உள்ளது.
ரவிசங்கர் பிரசாத் அளித்த விளக்கத்தில், 3 ஆண்டு சிறை தண்டனை இருக்கிறது, இல்லையென்றால் நீதிமன்றத்தை அணுகலாம் என்று கூறியிருந்தார். நீதிபதி என்ன வள்ளலாக மாறப்போகிறாரா? அல்லது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பணம் கொடுக்கப்போகிறாரா?. ஏற்கனவே நம்மிடம் வரதட்சணை தடைச் சட்டம் இருக்கிறது. வரதட்சனை தடைச் சட்டத்தால் பெண்களுக்கு பயன் கிடைக்காமல் நீதிமன்ற படிக்கட்டுகளில் அலைந்து கொண்டிருக்கிறார்கள். அதேபோல், முத்தலாக் தடைச் சட்டம் பெண்களுக்கு பயனிக்காமல் போய்விடக் கூடாது.
ஷரியத் அடிப்படையில் இந்தப் பிரச்னையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின் 14வது பிரிவில் வழங்கியுள்ள தனிச்சட்டம் இது. ஒரு கையில் உரிமையை கொடுத்துவிட்டு, இன்னொரு கையில் பறித்துவிட்டால் எப்படி?. எந்த மதத்தையும் யாரும் பின்பற்றலாம். மத நடவடிக்கைகளை பின்பற்றலாம். மத பழக்க வழக்க படி திருமணம் செய்து கொள்ளலாம். அதன் வழக்கப்படி விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று அரசியலமைப்பு சட்டம் சொல்லியுள்ளது. தற்போது விவாகரத்து வழக்கத்தில் கை வைத்தால் எப்படி? ஷரியத் படி தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
பெண்களைக் காப்பாற்ற போகிறோம் என்று சொல்கிறார்கள். பெண்களுக்கு முதலில் சொத்துரிமை வழங்கியது இஸ்லாம். பெண்களுக்கு வாரிசு உரிமை வழங்கியது இஸ்லாம். கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமையை வழங்கியது இஸ்லாம். விவகாரத்து, மறுமணம் ஆகிய உரிமைகளை வழங்கியது இஸ்லாம். இதெல்லாம் ஏதோ மிகப்பெரிய போராட்டங்களுக்குப் பிறகு கிடைத்தவை அல்ல. எந்தவொரு தலைவரும் போராடி பெற்றுத்தந்தது அல்ல. இஸ்லாம் தானாக வழங்கிய உரிமைகள்.
மாற்றம் வரவேண்டும் என்று சொல்கிறீர்கள். எந்த மாற்றம் கொண்டு வரவேண்டும் என்றாலும் அது அந்தச் சமூகத்திற்குள் இருந்து வர வேண்டும். உடன் கட்டை ஏறுதல், பால்ய திருமணம், தேவதாசி முறை ஆகியவற்றை நம்முடைய முன்னோர்களே தவறு என்று உணர்ந்து திருத்திக் கொண்டார்கள். அதேபோல் தலாக் முறையில் ஏதேனும் பிரச்னை என்றால் அதனை ஷரியத்திடம் கொடுத்துவிட வேண்டும். அவர்கள் ஒருதீர்வு காண்பார்கள். அவர்களோடு நீங்கள் கலந்து ஆலோசிக்கலாம். ஷரியத்தில் கை வைக்க நினைத்தால் அதனால் முஸ்லீம் பெண்களுக்கு எந்தப் பயனும் ஏற்பட போவதில்லை. மீறினால் ’ஒன் டைம் செட்டில்மெண்ட்’ முறையில் கிடைக்கக் கூடிய பணமும் கிடைக்காமல் முஸ்லீம் பெண்கள் அபலைகளாக மாற வேண்டிய நிலை ஏற்படும்.
இந்தச் சட்டம் தேசிய ஒற்றுமை, பன்முகத்தன்மை, மதச்சார்பின்மை ஆகியவற்றிற்கு எதிரானது. இதுஒரு சமூக தீர்திருத்தம் அல்ல. நான் பகிரங்கமாக ஒரு குற்றச்சாட்டை சொல்ல விரும்புகிறேன். பாஜக தனது மதவாத செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்புகிறது. முஸ்லீம்களின் அடையாளங்களை அழிக்க விரும்புகிறது” என்றார்.