டிரெண்டிங்

ஜெயலலிதா இல்லத்தை சுத்தப்படுத்தவே சோதனை: அன்வர் ராஜா

ஜெயலலிதா இல்லத்தை சுத்தப்படுத்தவே சோதனை: அன்வர் ராஜா

Rasus

வருமான வரி சோதனையால் போயஸ் தோட்டத்தின் மீதுள்ள களங்கம் துடைக்கப்படும் என்று அதிமுக எம்பி அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.

போயஸ் கார்டனில் நடைபெற்ற வருமான வரித்துறையினர் சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அன்வர் ராஜா, "ஜெயலலிதா மறைவிற்கு பின் அந்த வீட்டை பயன்படுத்துபவர்கள், அங்கு ஆவணங்களை மறைத்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளது. ஜெயலலிதா வாழ்ந்த இடம் ஒரு தூய்மையான இடமாக மாறுவதற்கு இந்த சோதனை பயன்படும் என்றுதான் கருதுகிறேன். வருமான வரித்துறை சோதனைக்கும் மாநில அரசுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. முதலமைச்சர் கோட்டையில் இருந்தபோதும் கூட அங்கு சோதனை நடைபெற்றது. தலைமைச் செயலாளர் அறையிலும் சோதனை நடைபெற்றது.

முதலமைச்சர், துணை முதலமைச்சர் தான் இந்த சோதனைக்கு காரணம் என சொல்வதெல்லாம் பொய்யான குற்றச்சாட்டு. இதில் ஆதாரம் இல்லை. ஒருவேளை பாரதிய ஜனதாவே அரசியல் ரீதியாக இந்த சோதனையை நடத்தியிருந்தால் கூட, சோதனைக்கு பின் மேற்கொள்ளப்படும் தொடர் நடவடிக்கை மூலமாகத் தான் அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்பட்ட சோதனையா..? இல்லையா..? என்பது தெரியவரும். வருமான வரி சோதனையால் களங்கம் ஏற்பட்டுவிட்டதாக கருதவில்லை. இந்த சோதனையால் களங்கம் துடைக்கப்பட இருக்கிறது என்பதாகவே பார்க்கிறேன்" என்றார்.