ஜனவரி 3-ம் தேதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 8-ம் தேதி தமிழக சட்டசபை கூட்டத் தொடர் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், அன்று சபையில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்துகிறார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் இணைந்த பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இது ஆகும். அதேபோல், ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. ஆக தேர்ந்து எடுக்கப்பட்ட பிறகும், அவரது ஆதரவு எம்.எம்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகும் நடைபெறும் முதல் கூட்டம் இது.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜனவரி.3ஆம் தேதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத் தொடர் 8-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் நடந்து கொள்வது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.