அதிமுக ஆதரவு எம்எல்ஏ-க்கள் 3 பேர் எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினர்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை கைதியாக சிறையில் உள்ள பேரறிவாளனின் பரோல் தொடர்பாக சட்டசபையில் சிறப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும் என சபாநாயர் தனபாலிடம் மனித நேய ஜனநாயகக் கட்சியின் எம்எல்ஏ தமீமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்த கருணாஸ் எம்எல்ஏ, கொங்கு இளைஞர் பேரவையை சேர்ந்த எம்எல்ஏ தனியரசு ஆகியோர் இன்று மனு அளித்தனர். இதனைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவர்கள், பேரறிவாளன் பரோல் தொடர்பாக கொண்டுவரப்படும் சிறப்பு தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
தமிமூன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது அதிமுக-வின் கூட்டணி கட்சிகளாக இருந்தாலும், அதிமுக-வின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.