டிரெண்டிங்

அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் : தினகரன் ஆதரவாளர்களுக்கும் அழைப்பு

அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் : தினகரன் ஆதரவாளர்களுக்கும் அழைப்பு

webteam

அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நாளை காலை 11 மணியளவில், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.

அ.தி.மு.கவில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் தமிழக ஆளுநரிடம் முதலமைச்சரை மாற்றக் கோரி கடிதம் அளித்துள்ளனர். இதனால் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேருக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

முன்னதாக கடந்த 28ஆம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக முடிவெடுக்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பல எம்.எல்.ஏக்கள் கலந்துகொள்ளவில்லை என்பதால் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படவில்லை. பின்னர் அன்று மாலை வெளியான அறிவிப்பில் ஆகஸ்ட் 12ஆம் தேதி அ.தி.மு.கவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் அதிமுக சார்பில் நாளை காலை 11 மணியளவில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளதால், பொதுக்குழுவில் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்திற்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.