இரட்டை இலை சின்னத்தை மீட்க அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் இன்று இரவு டெல்லி செல்கின்றனர்.
தேர்தல் ஆணையத்தில் அதிமுகவின் இரண்டு அணிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோரும் எம்பி மைத்ரேயன் மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோரும் இன்றிரவு டெல்லி செல்கின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா நியமனம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை திரும்பப் பெற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதற்காக நிர்வாகிகள், எம்பிக்கள், எம்எல்ஏக்களிடம் கையெழுத்து பெறப்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து, டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க முடிவு செய்யப்பட்டது. இதன்மூலம் முடக்கப்பட்டுள்ள இரட்டை இலை சின்னத்தை திரும்பப் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கிடையே, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களும் டெல்லி சென்று குடியரசுத் தலைவரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.