ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை ஒட்டி அதிமுகவின் ஆட்சிமன்றக் குழுவில் முதலமைச்சர் பழனிசாமி, கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் உயர்மட்ட ஆலோசனைக் குழு கூட்டம் இன்று காலை முதல் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சரும், கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சரும் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு தினத்தை எப்படி அனுசரிப்பது, ஆர்.கே.நகர் தேர்தலில் வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.
பின்னர், அதிமுக ஆட்சிமன்றக்குழுவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. 7 பேரைக் கொண்ட அதிமுகவின் ஆட்சிமன்றக் குழுவில் ஜெயலலிதா, விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவால் 2 இடங்கள் காலியாக இருந்தன. ஆனால், ஆட்சிமன்ற குழுவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து சில நிர்வாகிகள் கூச்சலிட்டதால் ஆலோசனை கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. எதிர்ப்பு தெரிவித்தவர்களை முதலமைச்சர் பழனிசாமி சமாதானம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இறுதியாக, ஆட்சிமன்றக் குழுவில் முதலமைச்சர் பழனிசாமி, வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, பா.வளர்மதி ஆகியோரை சேர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே ஆட்சிமன்றக் குழுவில் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், ஜஸ்டின் செல்வராஜ், தமிழ்மகன் உசேன், பி.வேணுகோபால் ஆகியோர் உள்ளனர். மொத்தம் 9 பேர் கொண்ட புதிய ஆட்சி மன்றக் குழு அறிவிக்கப்பட்டது. ஆர்.கே.நகர் தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரம் இந்த ஆட்சி மன்றக் குழுவுக்கு மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.