டிரெண்டிங்

அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த வேண்டும்: கே.சி. பழனிசாமி

அதிமுகவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த வேண்டும்: கே.சி. பழனிசாமி

webteam

அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த சுதந்திரமான, அச்சமற்ற அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு தேர்தல் ஆணையத்தில் முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அதிமுகவின் கட்சி பெயர், இரட்டை இலை சின்னம் தொடர்பாக, மனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள் என்ற நிலையில் 28ஆம் தேதி கூரியர் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு கே.சி. பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். அதிமுகவில் இனி பொதுச் செயலாளர் பதவியே கிடையாது என்றும், அதற்கு இணையாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு அதிகாரம் தரப்படும் என்றும் கடந்த 12ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதுதொடர்பாக, தேர்தல் ஆணையத்தில் தீர்மானங்களின் நகல்கள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கே.சி. பழனிசாமி பொதுச் செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், தேர்தல் நடைபெறும் வரை ஏற்கனவே டிசம்பர் 5ஆம் தேதி நிலவரப்படி இருந்த கட்சிப் பொறுப்பாளர்களை யாரும் நீக்கவோ, நியமிக்கவோ தடை விதிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். பொதுச் செயலாளர் தேர்தல் நடைபெறும் வரை கட்சியின் அன்றாட செலவு தவிர்த்து, கட்சியின் சொத்துக்கள் தொடர்பாக பரிவர்த்தனை மேற்கொள்ள தடை விதிக்குமாறும் கே.சி. பழனிசாமி கோரியுள்ளார். கட்சித் தேர்தல் நடைபெறும் வரை கட்சியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் எந்த கொள்கை முடிவும் எடுக்கத் தடை விதிக்க கோரியுள்ள கே.சி. பழனிசாமி, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதை ரத்து செய்யுமாறும் கேட்டுள்ளார். 

ஜெயலலிதா எம்எல்ஏவாக இருந்த ஆர்.கே. நகர் தொகுதிக்கு இடைத்தேர்தலும், உள்ளாட்சித் தேர்தலும் எந்த நேரத்திலும் அறிவிக்கப்படக் கூடிய சூழலில், ஆவணங்களில் கையெழுத்திட பொதுச் செயலாளருக்கே அதிமுக சட்டவிதிகள் அதிகாரம் அளித்திருப்பதால், இந்த கோரிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்குமாறும் தேர்தல் ஆணையத்தை கே.சி. பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.