அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பு தொடர்பான பல்வேறு சலுகைகள் இடம்பெறும் என கூறப்படுகிறது.
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இரண்டு கட்டமாக வெளியிட்டுள்ள அதிமுக, ஓரிரு நாள்களில் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட உள்ளது. தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாக உள்ள ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம் மற்றும் இல்லத் தரசிகளுக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படும் என்பதனை அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இது தவிர பொருளாதாரம், வேலை வாய்ப்பு சார்ந்த முக்கியமான வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும் எனக் கூறப்படுகிறது. தங்கள் கூட்டணியில் உள்ள பசும்பொன் தேசியக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியை அதிமுக ஒதுக்கி உள்ளது.
இவை தவிர இக்கூட்டணியில் 9 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. குறிப்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு இதுவரை தொகுதி ஒதுக்கப்படவில்லை என்பது நினைவுக் கூறத்தக்கது.